பக்கம் எண் :


டாலும் பொருள் மாறாகாது. மணி - அழகு ; அல்லது கருமையென்று கூறலுமாம். தோகை - மயிலின் வால்இறகுகள். அதனையுடைய மயிலுக்கு ஆதலால் ஆகுபெயர். சூர் - சூரபன்மன் ; சூரபன்மன் கடலிடை மாமரமாக நின்றபோது அதனை வெட்டிச் சாய்ந்து, அவன் கொற்றத்தை யழித்து வெற்றிகொண்டார் என்பது கந்தபுராண வரலாறு. சே+அடி=சேவடி. செம்மையையுடைய திருவடிகள். அரண் - பாதுகாப்பு. இதுகாறும் கடவுள் வணக்கம் கூறி முடித்தார். இனி, அவையடக்கங் கூறுகின்றார். இவர் எல்லாக் கடவுளர்கட்கும் வணக்கங் கூறுதலால் சம நோக்குடையர், சமய வேறுபாடற்றவர் என்பது புலனாகின்றது. (5)

அவையடக்கம்

6. வெந்தறுகண் வேழத்தை வேரிக் கமலத்தன்
தந்துவினால் கட்டச் சமைவதொக்கும்-பைந்தொடையில்
தேன்பாடும் தார்நளன்தன் தெய்வத் திருக்கதையை
யான்பாடல் உற்ற இது.

(இ - ள்.) பைந் தொடையில் தேன்பாடும் தார் நளன்தன் தெய்வ திருக்கதையை - பசிய மலர்களின் வரிசையில் வண்டுகள் பாட்டுப் பாடுகின்ற மாலையையணிந்த நளமன்னனின் தெய்வத்தன்மையுள்ள வரலாற்றை, யான் பாடல் உற்ற இது - நான் பாடத் தொடங்கிய இச் செயல், வெம் தறுகண் வேழத்தை வேரி கமலத்தின் தந்துவினால் கட்ட சமைவது ஒக்கும் - சினத்தால் அஞ்சாத நெஞ்சுடைய கடாயானையை மணமுள்ள தாமரை நூலினாற் கட்டுதற்கு முயல்வது போன்றுள்ளதாம்.

(க - து.) நளமன்னன் வரலாற்றை யான் பாடலுற்றது யானையைத் தாமரைநூலினால் கட்டுதல் போன்றது.

(வி - ரை.) தறுகண் - அஞ்சாமை. யானைக்கு அடை. மிக வலிமையுடைய யானை, அது கட்டுக்கடங்காதது. இத்தன்மைத்தாய யானையைத் தாமரை நூலினால் கட்டி அடக்குவதாயின், அஃது எவ்வாறு அடங்காதோ அது போன்று, நளமன்னன் பெருமைமிக்க வரலாற்றைக் கூற எண்ணிப் பாடலுற்றேன், இஃது எனது அவா. என் சொல்லில் பாடலில் அடங்காது, ஆனால் பாடுகின்றேன். கற்ற பெரியார் ஏற்றருள்வராக என்னும் குறிப்புக்கொண்டு ஆசிரியர் இவ்வாறு கூறினார். இது குறிப்பெச்சம்.