|
என்பாராகலின், நளனை வீரனென அவன்
வெற்றிச் சிறப்பைக் கூறிக் காதலாற் கட்டுண்ட
நிலையைக் கூறினார். கம்பர் இராவணன் வணங்காமுடி
வேந்தன் என்பதைச் சுட்டுங்கால்,
1‘வலியநெடும் புலவியினும் வணங்காத
மகுடநிரை வயங்க’
என்றார். அகலச் செறு :
இருபெயரொட்டுப் பண்புத் தொகை. காதலால்
துவக்குறுதலைப் போர் செய்வதாக உருவகப்படுத்தி ‘அகலச்
செறுவின் மீதோடி’ என்றார். செறு - வயல் :
சேற்றால் நிறைந்தது என்னும் பொருள். சேறு என்பது
செறு எனக் குறுகிற்று. நீர்பெருகி ஓடுங்கால்
ஓடுகின்ற வழியில் நீர் சென்ற பின், இளமணல்
கொழித்துச் செல்வது இயற்கை. அதுபோல் தமயந்தி
காதலேன்னும் நீர், நளமன்னன் மார்பென்னும்
வயலிற் பாய்ந்தோடியதால் தமயந்தி
கொங்கைகளிற் படிந்திருந்த குங்குமத்தோடு
சேர்ந்த கலவைச் சாந்து என்னும் வண்டல் படிந்தது
என உருவக அணியாககிக் கூறினார். வண்டல் -
கல்மண் சேர்ந்து கலவாத மெல்லிய சேற்றுக் குழம்பு.
கார் - கருமை. அல்லது மேகம் போன்ற என்று பொருள்
கொள்ளலுமாம். உடைந்து - நாணானது உடைவுபட்டு என்று
கொள்க. (169)
நளன், தமயந்தின் கொங்கை முதலியன
பொருந்தக்
கூடினானெனல்
177. கொங்கை முகங்குழையக் கூந்தல் மழைகுலையச்
செங்கயற்கண் ஓடிச் செவிதடவ - அங்கை
வளைபூசல் ஆட மடந்தையுடன் சேர்ந்தான்
விளைபூசற் கொல்யானை வேந்து.
(இ - ள்.) விளைபூசல் கொல்யானை
வேந்து - (பகைவரோடு) உண்டாகும் போரில்
(அவர்களைத் தவறாமல்) கொல்கின்ற வலிமை
பொருந்திய யானைப் படையையுடைய நளமன்னன்,
மடந்தையுடன் - தமயந்தியோடு, கொங்கைமுகம் குழைய -
(அவளுடைய) கொங்கை முற்றங்கள் அழுந்த, கூந்தல்
மழைகுலைய - கூந்தலாகிய மேகம் அவிழ்ந்து தொங்க,
செம் கயற்கண் ஓடி செவி தடவ - செவ்வரிபடந்த
கெண்டைமீன் போன்ற கண்கள் விரைந்துசென்று
காதுகளைத் தடவ, அம்கை வளை பூசல்ஆட - அழகிய
கைவளையல்கள் (ஒன்றோடொன்று தாக்கி) ஒலிக்க,
சேர்ந்தான் - கூடினான்.
1. கம்பரா, மாரீசன் வதை: 4.
|