பக்கம் எண் :

22நளவெண்பா[ சுயம்பர காண்டம்]

(வி - ரை.) சேமம் - காவல். ‘வேல் மன்னன்’ வேற்படையை ஏந்திய அரசன். செந்தனிக்கோல் தனிச் செங்கோல் என மாற்றியுரைக்கப்பட்டது. அன்றி: இடைப்பிற வரலுமாம். காளை நளன் - காளைபோன்ற நளன், உவமைத் தொகை. நாடு ஒருங்கிழப்ப இரண்டாம் வேற்றுமைத் தொகை. ஆழி - ஆழமானது என்பது பொருள் : கடல். (11)

நளமன்னன் வரலாறு
நிடத நாட்டுச் சிறப்பு

19. காமர் கயல்புரளக் காவி முகைநெகிழத்
தாமரையின் செந்தேன் தளையவிழப் - பூமடந்தை
தன்னாட்டம் போலும் தகைமைத்தே சாகரஞ்சூழ்
நன்னாட்டின் முன்னாட்டும் நாடு.

(இ - ள்.) சாகரம் சூழ் நல் நாட்டின் முன் நாட்டும் நாடு - கடல் சூழ்ந்த நல்ல நாடுகளில் முதன்மையானதெனக் குறிப்பிட்டுரைக்கும் நிடத நாடானது, காமர் கயல்புரள-அழகிய கெண்டை மீன்கள் பிறழ்ந்து வருதலாலும், காவிமுகை நெகிழ - கருங்குவளைகளின் அரும்புகள் விரிதலாலும், தாமரையின் செம்தேன் தளை அவிழ - செவ்வியான தேனையுடைய தாமரை அரும்புகள் மலர்தலாலும், பூமடந்தைதன் நாட்டம் போலும் தகைமைத்து - திருமகளின் கண்களை யொத்த சிறப்பு வாய்ந்தது.

(க - து.) நிடதநாடு திருமகளின் கண்களைப் போன்ற சிறப்பினையுடையது.

(வி - ரை.) கயல்மீன்களின் பிறழ்ச்சியும், கருங்குவளை தாமரைகளின் கட்டவிழ்ந்த மலர்களின் காட்சியும் திருமகளின் கண்ணிலுள்ள வெண்ணிறம் கருநிறம் செந்நிறம்போல் கண்டார் வியக்குமாறு தோன்றுகின்றன. இவைகள் அந்நாட்டில் யாங்கணும் இருத்தலால், அந்நாடு நிலவளனும் நீர்வளனும் மிக்கதாயிற்று. அங்கே மழைபெய்து மாதிரங் கொழுப்ப விளைவுமல்கி, அந்நாட்டில் பசியும் பிணியும் நீங்கி, வசியும்வளனும் சுரந்து நிற்கின்றது.

பூமடந்தை என்பதற்கு நிலமகள் என்று பொருள் கொள்ளலுமாம். அயோத்தி நகரைப் புகழ வந்து கம்பநாடர்,

1‘நிலமகள் முகமோ திலகமோ கண்ணோ
நிறைநெடு மங்கல நாணோ’

என்று நிலமகளின் முகமாகவும் கண்ணாகவும் கூறுவது காண்க.

1. கம்ப ராமா, நகர: 2.