பக்கம் எண் :

மூலமும் உரையும்23

நாட்டம் - கண் : நாடுதலையுடையது என்பது பொருள்.

சாகரம் - கடல். சகரர்களால் தோண்டப்பட்டதென்பது புராணக் கதை. 1‘சகரர் தொட்டலால் சாகரம் எனும் பெயர் தழைப்ப, மகரவாரிதி சிறந்தது’ என்பது கம்பர் காட்டும் உண்மை. (12)

மாவிந்த நகரச் சிறப்பு

20. கோதை மடவார்தம் கொங்கை மிசைத்திமிர்ந்த
சீதக் களபச் செழுஞ்சேற்றால் - வீதிவாய்
மானக் கரிவழுக்கும் மாவிந்தம்2 என்றுளதோர்
ஞானக் கலைவாழ் நகர்.

(இ - ள்.) கோதை மடவார்தம் கொங்கை மிசை திமிர்ந்த - பூமாலையணிந்த இளம்பெண்களின் மார்பிடத்தில் பூசப்பெற்ற, சீத களப செழும் சேற்றால் - குளிர்மையுள்ள கலவைச் சாந்தாகிய வளமுள்ள குழம்பினால், வீதிவாய் மானக்கரி வழுக்கும் - தெருக்களில் பெரிய யானைகள் (கால்) சறுக்குகின்ற, மாவிந்தம் என்று உளது - மாவிந்தம் என்னும் பெயருடையதாக உள்ளது, ஞான கலைவாழ் ஓர் நகர் - உண்மையறிவுக்கலை செழித்திருக்கின்ற ஒரு நகரம்.

(க - து.) நிடத நாட்டில் ஞானநூல் வல்லார் மிக்கிருக்கின்ற மாவிந்தம் என்னும் ஓர் நகரம் உள்ளது என்பதாம்.

(வி - ரை.) கோதைமடவார் என்றமையால் இளமை நலமிக்க பெண்கள் என்பது பெறப்பட்டது. அவர்கள் நாள்தோறும் நீராடும்போது அவர்கள் பூசியிருந்த கலவைச் சாந்துகளே எங்கும் சேறாக நிறைந்து அச்சேற்றில் உருவினும் வலியினும் பெரிதான யானைகள் கூடக் கால் வழுக்குமென்றமையால், அந்நாட்டுச் செல்வ வளனும் மகளிர் ஒப்பனை செய்துகொள்ளும் திறனும் கூறியவாறாயிற்று. ஒரு நாடு செல்வத்திற் சிறந்ததென்பதற்கு எடுத்துக்காட்டாக அந்நாட்டு மக்களைத் தோற்றத்தாலும் ஆடை அணி முதலிய புனைபொருள்களாலும் அறியலாம். அதினும் பெண்களே அவைகளைப் புனைந்து கோலங் கொள்வராதலால், அதனை மடவார் மேல் வைத்துக் கூறினார். அந்நகர் செல்வ வளத்தோடு உண்மைக் கல்வியும் பெற்ற நகர் என்பாராய் ‘ஞானக்கலை வாழ் நகர்’ என்றார். ஞானம் - மெய்யறிவு. அங்கே போலிக்கலை இல்லை. உண்மைக் கலையில் வல்லுநரே உள்ளனர் என்பதை நகரின்மேல்

1. கம்ப. அகலிகை : 43. (பாடம்) 2. என்பது.