பக்கம் எண் :

260நளவெண்பா[ கலிதொடர் காண்டம்]

களிலிருந்து பேசுவோர் திறன் புலப்படுமாறு ‘எடுத்த கொடி என்ன கொடி’ என்பதில், அவன் பெருமிதத்தோடு கேட்கும் வினாவுரையும், அக்கருத்தை உணர்ந்த புட்கரன், அரசர் பெருமை தோன்றப் பிடித்த கொடியன்று இது, சூதாடுவோரை வெல்லற்குப் பிடித்த கொடி யென்பதை அவன் பணிமொழி புலனாகுமாறு, ‘மிடற்சூது வெல்லும் கொடி’ என, உரைத்த விடையுரையும் அமைத்த செப்பம் உணர்க. தானாகச் செல்லாது பிறன் வேண்டலால் ஆங்கே போந்துள்ளதைக் குறிக்க ‘வெங்கலியால்............செல்லும் கொடியோன்’ என்றார். கொடியோன் கொடுமையுடையோன் எனவும், கொடிக்குரியோன் எனவும் இருபொருள் நயந்தோன்ற நின்றமை காண்க. கொடியோன் : குறிப்பு வினையாலணையும் பெயர். (37)

நளன், புட்கரனைத் தன்னோடு சூதாட அழைத்தல்

216. ஏன்றோம் இதுவாயின் மெய்ம்மையே எம்மோடு
வான்றோய் மடல்தெங்கின் வான்தேறல் - தான்தேக்கி
மீதாடி வாளைவயல் வீழ்ந்துழக்கும் நன்னாடம்
சூதாட என்றான் துணிந்து.

(இ - ள்.) வாளை - வாளை மீன்களானவை, வான்தோய் தெங்கின் - வானளாவ வளர்ந்துள்ள தென்னையின், மடல் வான் தேறல் - மடலிலுள்ள சிறந்த கள்ளினை, தேக்கி மீது ஆடி - (வயிறார) உண்டு மேலே குதித்து ஆடி, வயல் வீழ்ந்து உழக்கும் நல் நாடன் - வயல்களில் விழுந்து தண்ணீரைக் கலக்குகின்ற நல்ல நிடதநாட்டுக்கு மன்னனாகிய நளனானவன், மெய்ம்மையே இது ஆயின் என்றோம் - நீ இவ்வாறு சொல்லியது உண்மையேயாயின் நாம் இதை ஏற்றுகொள்கின்றோம், எம்மோடு சூதாட என்றான் துணிந்து - எம்மோடு நீ சூதாடுக என்று துணிந்து கூறினான்.

(க - து.) நளமன்னன் புட்கரனிடம் ‘ஏ மன்னவனே ! நீ கூறுவது உண்மையேயாயின் அதை நாம் ஒப்புக்கொள்கின்றோம் ; நீ என்னுடனே சூதாட வருக’ என்று கூறினான் என்பதாம்.

(வி - ரை.) இச் செய்யுள் கொண்டுகூட்டுப் பொருளாக அமைத்திருத்தலான், ‘வாளை வான்தோய் மடல் தெங்கின்.......உழக்கும் நல்நாடன், மெய்ம்மையே இதுவாயின் ஏன்றோம் ; எம்மோடு சூது ஆட துணிந்து என்றான்’ எனக்கூட்டிக் பொருள்