|
நளன், புரட்கரனிடம் சென்று அவன்
கொடியை வினவுதல்
215. அடற்கதிர்வேல் மன்னன் அவனேற்றின்
முன்போய்
எடுத்தகொடி என்னகொடி என்ன - மிடற்சூது
வெல்லும் கொடியென்றான் வெங்கலியால் அங்கவன்மேல்
செலலும் கொடியோன் தெரிந்து.
(இ - ள்.) அடல் கதிர்வேல் மன்னன்
- (பகைவரைக்) கொல்லுகின்ற ஒளிபொருந்திய
வேலையுடைய நளமன்னன், அவன் ஏற்றின் முன்போய் -
அப்புட்கர மன்னன் ஏறிவந்த எருதிற்கு முன்சென்று
நின்று, எடுத்து கொடி என்ன கொடி என்ன-அவன்
ஏற்றின்மேற் பிடித்துக்கொண்டு வந்திருந்த
கொடியை நோக்கி இக்கொடி என்ன கொடியென்று
கேட்க, வெம்கலியால் அங்கு அவன்மேல் - கொடிய
கலியின் கோட்பாட்டினால் அவ்விடத்து
அந்நளமன்னனிடம், செல்லும் கொடியோன்
தெரிந்து-சென்றவனான புட்கரன் (நன்கு அவன்
கருத்தை) அறிந்து, மிடல்சூது வெல்லும் கொடி
என்றான் - மிக்க சூதாட்டத்தில் எதிர்த்த
எவரையும் வெற்றிகொள்கின்ற கொடி இதுவாகுமென்று
கூறினான்.
(க - து.) இவ்வாறு, எருதின்மேல் ஏறிச்சென்ற
புட்கரன்முன் நளன் சென்று, அவன் பிடித்திருந்த கொடியை
நோக்கி, ‘இக்கொடி என்ன
கொடி?’ என்று வினவ, ‘இது, சூதாட்டத்தில் எதிர்ப்போரை
வெல்லும் கொடி’ என்று புட்கரன் மறுமொழி கூறினான்
என்பதாம்.
(வி - ரை,) அடல் கதிர்வேல் :
பகைவரை வெல்லும் ஆற்றல் படைத்த ஒளிமிக்க
வேற்படை என அவன்றன் வெற்றி மேம்பாட்டை அவன்
வேலின்மேல் ஏற்றிக் கூறினார்,
1‘பல்பொறி மஞ்ஞை வெல்கொடி’
எனப் பிறரும் கூறுவதுபோல. இதில் ‘வெல்
கொடி’ எனக் கொடியின்மேல் ஏற்றிக் கூறியதை உணர்க.
வெற்றிவேல் மன்னனாகலானும், தனக்குமுன் அஞ்சாது
கொடியைப் பிடித்துக் கொண்டு நிற்றலானும்
அது பொறாமல் அவனை நோக்கி, ‘இக்கொடி என்ன
கொடி?’ யென வினவினான். அதற்குப் புட்கரன், இவன்
கலியால் உணர்வு திரிந்திருப்பதை அறிந்தான ; அதற்கு
ஏற்பச் ‘சூது வெல்லும் கொடி’ என்றான். இவ்விருவர்
உரையாடல்
1, திருமுருகு : 122.
|