பக்கம் எண் :

258நளவெண்பா[ கலிதொடர் காண்டம்]

புட்கரன், தன்நாடு நீங்கி நிடதநாட்டிற் புகுந்தான் எனல்

214. வெங்கட் சினவிடையின் மேலேறிக் காலேறிக்
கங்கைத் திரைநீர் கரையேறிச் - செங்கதிர்ப்பைம்
பொன்னொழியப் போதும் புறம்பணைசூழ் நன்னாடு
பின்னொழியப் போந்தான் பெயர்ந்து.

(இ - ள்.) வெம்கண் சினவிடையின் மேல்ஏறி - (முன் கூறியபடி புட்கரனானவன்) கொடிய கண்களையுடைய சினம் பொருந்திய எருதின்மேல் ஏறிக்கொண்டு, கங்கை திரைநீர் கால் ஏறி - கங்கையாற்றின் அலைகளோடு கூடிய நீரானது கால்வாய் வழியாகச்சென்று, கரைஏறி - கரைகளிலும் ஏறிப்புரண்டு சென்று, செங்கதிர்ப் பைம்பொன் ஒழிய போதும் - சிவந்த கதிர்களாகிய பசியநெற்குலைகள் மறையும்படி ஓடுகின்ற, பணைபுறம்சூழ் நல்நாடு - மருதநிலம் பக்கத்திற் சூழ்ந்துள்ள தன்னுடைய நல்ல நாடானது, பெயர்ந்து பின் ஒழியப் போந்தான் - பின்புறமாக இருப்ப அதைக்கடந்து (நிடதநாட்டுக்கு) வந்தான்.

(க - து.) புட்கரமன்னன், ஓர் எருதின்மேல் ஏறிக்கொண்டு, கங்கைநீர் வாய்க்கால் வழியாகச் சென்று நெற்கதிர்க்குலைகளைச் சாய்த்தோடிச் செல்கின்ற மருதநிலஞ் சூழ்ந்த தன்னாடு பின் இருப்ப, அதைக்கடந்து நிடதநாட்டுக்கு வந்து சேர்ந்தான் என்பதாம்.

(வி - ரை.) கால் - நீர் செல்லும் வழி. செங்கதிர்ப் பைம் பொன் என்றது, நெற்கதிர்க் குலைகளை. பொன்போன்று மஞ்சள் நிறமாக நெற்கதிர்கள் இருப்பதால் பொன் என்றார் : உவம ஆகுபெயர். 1‘பொன்னிறச் செந்நெல் பொதியொடு’ என்றதும் அறிக. புறம்பணை-பணைப்புறம்: சொன்னிலை மாறிய இலக்கணப் போலி. புட்கரன் நாடு, நீர்வளத்தானும் சிறந்த நாடு என அவன் நாட்டின் சிறப்பைக் கூறியவாறாம். இத்தகைய பொன்கொழிக்கும் தன் நாட்டைவிட்டு அவாமேலிடப் பிறநாட்டையும் தனக்குரிமையாக்கச் செல்கின்றானென்பதைக் குறிப்பால் விளக்கவே ‘நன்னாடு பின்னொழிய’ என்ற சொற்றொடரை அமைத்துரைத்தார். முன்பும் நளன், குண்டினபுரத்துக்குத் தமயந்தியின் சுயம்வரத்துக்குப் புறப்பட்டு வந்தகாலை ‘சடைச்செந்நெல் பொன் விளைக்கும் தன்னாடு பின்னா’ என்றார். அக்கருத்தையே ஈங்கும் அமைத்துரைத்தார் என்க. (36)

1. நாலடியார் : 269.