பதிப்புரை

 

     நம் செந்தமிழ் மொழி பழங்காலத்து மொழிகளுள் ஒன்றாகப்
பண்பட்டுச் சிறந்த மொழி. இதன்கண் காலத்துக்கேற்ப எழுந்த இலக்கியச்
செல்வங்கள் பல. அவைகளுள்
‘சதகம்' என்னும் வகையும் ஒன்று. சதம்
என்னும் சொல் வடசொல். ககரம் பெற்றுச் சதகம் என்றாயிற்று. சதகமாவது
நூறு என்னும் பொருளது.
அறப்பளீசுர சதகம் என்பது அறப்பள்ளித்
திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்மீது நூறு செய்யுட்களால்
ஆக்கப்பட்ட நூல் எனப் பொருள் தரும்.

     பிற்காலப் புலவர்கள் சதகவகை நூல்கள் யாத்து அதன்கண், மக்களுட்
சிறந்த மக்களாக வாழவேண்டிய உலகியல் நெறி, அறம் முதலியவற்றைச்
செம்பாகமான எளிய இனிய தொடர்களைக் கொண்டமைத்து
விளக்குவாராயினர். அதுபோன்றே இந்நூலும் சதுரகிரி என்னும் திருப்பதியில்
எழுந்தருளியிருக்கின்ற அறப்பள்ளி ஈசுரன்மீது வாழ்த்தாகப் பாடி
இறுதியடிகளில் இறைவன் பெயரை ஒரே மகுடமாக அமைத்து மேல்
அடிகளிலெல்லாம் அறனும் மறனும் பண்பும் பழக்கவழக்க ஒழுக்க
முறைகளும் பொதுள அமைத்துப் பாடப்பெற்றிலகுகின்றது.

     இத்தகைய அரிய நூலுக்கு எல்லோரும் நன்கு பொருள் தெரிந்து
பயிலும்பொருட்டு திரு.
புலவர் ‘அரசு' அவர்களால் நன்முறையில் உரை
எழுதுவித்துச் செப்பமுற அமைத்து வெளியிட்டுள்ளோம். தமிழ் மக்கள்
வாங்கிக் கற்று நற்பயன் எய்துவார்களென நம்புகின்றோம்.


                       சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.