பக்கம் எண் :

1

அம்பலவாணக் கவிராயர் பாடிய

சதுரகிரி

 அறப்பளீசுர சதகம்

தொடருரை

 

     அறப்பளீசுர சதகம் என்பது சதுரகிரி யென்னும் திருப்பதியில் உள்ள
அறப்பள்ளி
என்னுந் திருக்கோயிலில் எழுந்தருளிய சிவபெருமானை
வாழ்த்தும் முறையில் உலகியல்பற்றிக் கூறும் நூறு செய்யுட்களையுடைய சிறு
நூல். அறப்பள்ளி + ஈசுரன் : அறப்பளீசுரன். அறப்பள்ளியில் எழுந்தருளிய
ஈசுரன் : ஏழாம் வேற்றுமைத்தொகை. அறப்பளீசுரன் + சதகம் :
(அறப்பளீசுரனது சதகம்) : ஆறாம் வேற்றுமைத்தொகை. ஆகவே, மூன்று
சொற்களும் இரண்டு சந்திகளுங் கொண்ட தொடர் அறப்பளீசுர சதகம்.

 அறப்பள்ளி

     இது கொல்லிமலைச் சார்பிலுள்ள சதுரகிரியில் உள்ள திருக்கோயில்.
சதுரகிரிக்கே அறப்பள்ளியெனப் பெயருண்டென்றும் கூறுகின்றனர்.

சதகம்

     "விளையும் ஒருபொருள் மேல்ஒரு நூறு
     தழைய வுரைத்தல் சதகம் என்ப."      - இலக்கண விளக்கம்.

     ஒரு பொருளென்பது அகப்பொருள் புறப்பொருள்களில் ஒன்றைக்
குறிக்கும். இந் நூல் புறப்பொருளைப் பற்றியது.