பக்கம் எண் :

1.கந்தர் கலிவெண்பா
1

1. பூமேவு செங்கமலப் புத்தேளுந் தேறரிய
பாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு
2. நாதமுநா தாந்த முடவு நவைதீர்ந்த
போதமுங் காணாத போதமாய் - ஆதிநடு
3. அந்தங் கடந்தநித்தி யானந்த போதமாய்ப
பந்தந் தணந்த பரஞ்சுடராய் - வந்த
4. குறியுங் குணமுமொரு கோலமுமற் றெங்கும்
செறியும் பரம சிவமாய் - அறிவுக்

குறிப்புரை

1-36. முருகக்கடவுளுக்கும் சிவபெருமானுக்கும் வேற்றுமை இன்மையின் சிவபெருமானுக்குரிய விசேடணங்கள் பல இக்கண்ணிகளில் முருகககடவுளுக்கு ஏற்றிக் கூறப்படும்.
1. செங்கமலப்புத்தேள்-பிரமதேவர். பிரமதேவர் செந்தாமரையில் இருப்பதாகவும் வெண்டாமரையில் இருப்பதாகவும் இருவேறு வகையாக்க் கூறுவதுண்டு. ஒரே ஆசிரியர் இவ்விரண்டும் கூறுவது, “புறத்து மாயிரம் வெள்ளிதழாலொரு புண்ட ரீகமு மண்ணலும் போலவே”, “செந்தாமரையோனை” (தக்க. 282, 698) என்பவற்றையும் அவற்றின் உரை முதலியவற்றையுங் கொண்டு அறியலாகும். பா-யாப்பு; பரப்புமாம். பாமேவு தெய்வப் பழமறை: “தொடுக்குங் கடவுட் பழம்பாடல்” (62.) தே மேவு - தெய்வத்தன்மை பொருந்திய. புத்தேளும் பழமறையுமென்று கூட்டுக.
2. நாதமும் - நாத தத்துவமும். நவை தீர்ந்த - குற்றமற்ற. போதம் - அறிவு.
3. நித்தியம் ஆனந்தம் போதம்: இம்மூன்றும் சச்சிதானந்தமெனப்படும். பந்தம் தணந்த - இயல்பாகவே பாசத்தினின்றும் நீங்கிய.
4. குறி - பெயர், கோலம் - உருவம், எங்கும் செறியும் பரமசிவமாய்: “எங்கும், நீக்கமற நின்ற நிலைகாட்டி” என்பர் பின்; 28.