சந்த விருத்தம் 12. | கடகளி றுதவுக பாய்மிசைப் போர்த்தவள் | | கவிகுவி துறுகலின் வாரியைத் தூர்த்தவள் | | கடல்வயி றெரியவொள் வேலினைப் பார்த்தவள் | | கடிகமழ் தருமலர் தார்முடிச் சேர்த்தவள் | | இடியுக வடலரி யேறுகைத் தார்த்தவள் | | எழுதரு முழுமறை நூலினிற் கூர்த்தவள் | | எயிறுகொ டுழுதெழு பாரினைப் பேர்த்தவள் | | எனுமிவ ரெழுவர்க டாண்முடிச் சூட்டுதும் | | குடமொடு குடவியர் பாணிகைக் கோத்திடு | | குரவையு மலதொர்ப ணாமுடிச் சூட்டருள் | | குதிகொள நடமிடு மாடலுக் கேற்பவொர் | | குழலிசை பழகளி பாடிடக் கேட்டுடை |
12. (சந்தக் குழிப்பு.) தனதன தனதன தானனத் தாத்தன.
(அடி, 1) கபாய் - சட்டை; “கம்பக் கடரக் களிற்றின் கபாயணிந்த” (505.) போர்த்தவள்: மாகேசுவரி. கவி குவிதுறுகலின் - குரங்குகள் குவித்த உருண்டைக் கற்களால். வாரியை - சமுத்திரத்தை. தூர்த்தவள்: நாராயணி. வயிறு - நடுவிடம். பார்த்தவள்: கௌமாரி. தருமலர் - கற்பகத்தின் மலரை. சேர்த்தவள்: இந்திராணி.
(2) அரியேறு - ஆண் சிங்கம். ஆர்த்தவள்: காளி. எழுதரு - எழுதுதற்கரிய. கூர்த்தவள் - மிக்க ஊக்கத்தையுடையவள்; அபிராமி. பேர்த்தவள்: வாராகி. தலைவர்கள் செயல்களை அவர்கள் சக்திகளுக்கும் கூறுதல் மரபாதல் பற்றி எழுமகளிர் செயல்கள் இங்கே இங்ஙனம் கூறப்பட்டன.
(3) குடமொடு - குடமென்னும் கூத்தோடு; குடக்கூத்தென்பது திருமாலுக்குரியது; விநோதக் கூத்தின் வகையுள் ஒன்று; அதற்குரிய உறுப்புக்கள் ஐந்து; அக்கூத்தாவது தலையிலே அடுக்குக்குடம் இருக்க, இரண்டு தோள்களிலும் குடம் இருக்க, இரண்டு கைகளிலும் குடங்களை ஏந்தி ஆகாயத்திலே எறிந்து ஆடுவதென்பர். குடவியர் - கோவியர். பாணி - கைகளை. குரவை - குரவைக்கூத்து. ஓர் பணாமுடிச் சூட்டென்றது காளியனது முடியை. நடமிடுதல் - நர்த்தனம் செய்தல். குழல் - வேய்ங்குழல். அளி - வண்டு; “குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட” (மணி. 4;3.)
|