பக்கம் எண் :

சிதம்பரச் செய்யுட்கோவை403

535.
வளங்கு லாவரு மணங்க னார்விழி
  மயக்கி லேமுலை முயக்கி லேவிழு மாந்தர்காள்
களங்கு லாமுட லிறந்து போயிடு
  காடு சேர்முனம் வீடு சேர்வகை கேண்மினோ
துளங்கு நீள்கழ றழங்க வாடல்செய்
  சோதி யானணி பூதி யானுமை பாதியான்
விளங்கு சேவடி யுளங்கொ ளீர்யமன்
  விடுத்த பாசமு மடுத்த பாசமும் விலக்குமே.

    இஃது ஒன்பதின்சீர்க் கழிநெடிலடியாய் வந்த ஆசிரியவிருத்தம்.        
(55)

536.
கைத்தலத்த ழற்க ணிச்சி வைத்திடப்பு றத்தொ ருத்தி
  கட்கடைப்ப டைக்கி ளைத்த திறலோராம்
முத்தலைப்ப டைக்க ரத்தெ மத்தர்சிற்ச பைக்கு ணிற்கும்
  முக்கணக்க ருக்கொ ருத்தர் மொழியாரோ
நித்திலத்தி னைப்ப தித்த கச்சறுத்த டிக்க னத்து
  நிற்குமற்பு தத்த றம்மி றினையேவேள்
அத்திரத்தி னைத்தொடுத்து விட்டுநெட்ட யிற்க ணித்தி
  லக்கணுற்றி டச்செய் விக்கு மதுதானே.

    இது பதின்சீர்க் கழிநெடிலடியால் வந்த ஆசிரியவிருத்தம்.    
(56)


    535. முயக்கு - தழுவுதல். களம் - கள்ளம்; பொய்ம்மை; களங்கு உலாம் என்று பிரித்துக் களங்கென்பதற்குக் களங்கம் (குற்றம்) எனப் பொருள் கொள்ளுதலும் ஒன்று. இறந்துபோய் இடுகாடு சேர்முனம். தழங்க - ஒலிப்ப. அணி பூதியான் - திருநீற்றை அணிந்தவர். அடுத்த பாசம் - நம்பால் அநாதியாகப் பொருந்திய பாசம்.

    536. கைத்தலத்தில் அழலையும் கணிச்சியையும் வைத்து; கணிச்சி - மழு. கட்கடைப்படைக்கு இளைத்த - கடைக்கண்ணாகிய படைக்கலத்திற்கு வலியிழந்த. தாம் சிறந்த படைக்கலத்தை யுடையவராக இருந்தும் ஒரு பெண்பாலின் கட்படைக்கு இளைத்தாரென்றது ஒரு நயம். முத்தலைப் படை - திரிசூலம். எம் அத்தர். முக்கண் நக்கர்; நக்கர் - திகம்பரர். நித்திலத்தினைப் பதித்த கச்சு - முத்தாலாகிய கச்சு (527). வேள் - காமன். நெடு அயில் கண் நித்திலக் கண் உற்றிடச் செய்விக்கும் - நீண்ட வேல் போன்ற கண்ணைக் கண்ணீர்த் துளிகளாகிய முத்துக்களையுடைய கண்ணாக அமையச் செய்விக்கும்; அழும்படி செய்விக்குமென்றபடி. செய்விக்கும் அதுதான் நக்கருக்கு ஒருத்தர் மொழியாரோ; அது - அத்துன்பத்தை.

    இச் செய்யுள் தலைவி இரங்கல்.