பக்கம் எண் :

466குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

குரைபுனல் வரந்தி சுரர்தரு முருகவிழ்
  கொழுமலர் சிதறவி முத்தத் துவிண்டொடு
குலகிரி யுதவிய வளரிள வனமுலை
  கொழுநர்த மழகிய கொற்றப் புயங்களே.    
(5)

நேசிசை வெண்பா
604.
புயலார் பொழிற்காசிப் பூங்கொயின் மேய
கயலார் தடங்கணாள் காந்தன் - செயலாவி
உய்யத் துதியா ருதிப்பார் துதிப்பாரேல்
வையத் துதியார் மறுத்து.    
(6)

கட்டளைக் கலித்துறை
605.
மறைக்கோலங் கொண்ட வகிலேச ரேயின்று மாதர்முன்னே
பிறைக்கோலங் கொண்டு புறப்பட்ட வாமுன் பிறைமுடித்த
இறைக்கோல மோல மெனத்தேவ ரோல மிடவிருண்ட
கறைக்கோலங் கொண்டு நும்கண்டத் தொளித்த கனல்விடமே.
(7)

முட்டையென்று கருதி அணைத்தன. வரநதி - கங்கை. சுரர்தருவின் மலர். சிதறு அவிமுத்தத்து; அவிமுத்தம் - காசி; விட வேண்டிய காலத்தும் விடாமை யென்னும் பொருளினதென்பர்; முன்னொருகால் விசுவநாதர் திவோதானனென்பவன் பொருட்டுக் காசியை அகலும்படி நேர்ந்த காலத்தும் சூக்கும வடிவமாக விடாது வீற்றிருந்தனராதலின் இத்தலம் இப்பெயர் பெற்றது. வனமுலை - விசாலாட்சியம்மை.

    604. தடங்கணாள் - விசாலாட்சியம்மை. காந்தன் - கணவர். அவர் செயலைத் தம் ஆவி உய்யும்படி துதியாதவர்கள் மீட்டும் பிறவி யெடுப்பார்; துதித்தாராயின் உலகத்தில் மீட்டுப் பிறவார்.

    605. தலைவி கூற்று.

    அகிலேசரே, தேவரீர் முன்பு அமுதுசெய்தருளிய விடம் இப்பொழுது பிறைவடிவங் கொண்டு தோன்றியது என்ன வியப்பு!

    மறைக்கோலம் கொண்ட - வேதத்தையே உருவாகக்கொண்ட. பிறைக்கோலம் - பிறையினது வடிவத்தை. புறப்பட்டவா - தோற்றியது என்ன ஆச்சரியம்! இறைக்கு - இறையாகிய தேவரீருக்கு; இப்படர்க்கைப் பெயர் இங்கே முன்னிலைக்கண் வந்தது. ஓலம்: முறையீட்டுச் சொல். கறை - கறுப்பு. முன் நும் கண்டத்தில் ஒளித்த. கறைக்கோலங் கொண்டு என்றதனால் இப்போது வெண்ணிறங்கொண்டு புறப்பட்டது வியப்பாயிற்று; “வெள்ளை வண்ண விடமுமுண் டாங்கொலோ” (கம்ப. மிதிலைக் காட்சி. 146). பிறைக்கு விடம் உவமை: 309.

    இதனால் உண்டாகும் துன்பத்தைப் போக்கியருள வேண்டுமென்பது இசையெச்சம்.