பக்கம் எண் :

மதுரை மீனாட்சியம்மை குறம்531

    கொச்சகக் கலிப்பா
12.
கடமலைக்கும் வெம்மலையாங் கைம்மலையு மாயிரவாய்ப்
படமலைக்கு மரவரசும் பரித்தருளும் பார்மடந்தை
குடமலைக்குந் தடமுலையாங் குலமலைக ளிரண்டெனவும்
வடமலைக்குந் தென்பொதியு மலயமலை யென்மலையே.
13.
திங்கண்முடி சூடுமலை தென்றல்விளை யாடுமலை
தங்குபுயல் சூழுமலை தமிழ்முனிவன் வாழுமலை
அங்கயற்க ணம்மைதிரு வருள்சுரந்து பொழிவதெனப்
பொங்கருவி தூங்குமலை பொதியமலை யென்மலையே.

            அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
14.
கன்ன மதம்பெய் துறங்குகொலைக்
    களிறு கிடந்து பிளிறுமலை
தென்னந் தமிழும் பசுங்குழவித்
    தென்றற் கொழுந்துந் திளைக்குமலை
அன்னம் பயிலும் பொழிற்கூட
    லறலங் கூந்தற் பிடியாண்ட
பொன்னங் குடுமித் தடஞ்சாரற்
    பொதிய மலையென் மலையம்மே.

             எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
15.
மந்தமா ருதம்வளரு மலையெங்கண் மலையே
    வடகலைதென் கலைபயிலு மலையெங்கண் மலையே
கந்தவேள் விளையாடு மலையெங்கண் மலையே
    கனகநவ மணிவிளையு மலையெங்கண் மலையே

    12. கடம் அலைக்கும். கைம்மலையும் - திக்கயங்களும். அரவரசும் - ஆதிசேடனும். பரித்தருளும் - தாங்குகின்ற. குடத்தை அலைக்கும் பெரிய நகிலாகும் குலமலைகள் இரண்டு உண்டு என்று சொல்லும்படி. வடமலைக்கும் - வடமலையைக் காட்டிலும். தென் - அழகு. (பி-ம்.) ‘தென் பொதியம்’.

    13. புயல் - மேகம்.

    14. கன்னம் - காது. (பி-ம்.) ‘கன்னமதஞ் சாய்த்துறங்கு’. பிடி - மீனாட்சியம்மை.

    15. மந்த மாருதம் - தென்றற் காற்று. வடகலை - வடமொழி. இச்செய்யுளின் மூன்றாவது அடி காணப்படவில்லை.