கொற்கைத்துறையென்னும் துறைகளையும், பொதியமலையையும், பாண்டியனையும் பாராட்டுகின்றார்.
சோழநாட்டுச் செய்தி
இவ்வாறு தான் பிறந்த பாண்டிநாட்டை இவர் பாராட்டுகின்றது போலவே ஏனைய நாட்டின் பெருமையையும் உணர்ந்து ஏற்றவிடடங்களிற் சிறப்பிக்கின்றார். இவர் சோழ நாட்டுத் தலங்களாகிய சிதம்பரம், திருவாரூர், தரும்புரம், வைத்தீசுவரம் கோயிலென்பவற்றின் சம்பந்தமான பிரபந்தங்களை இயற்றியுள்ளார். சோணாட்டைத் திரிவீற்றிருந்த சோணாடு (429), காவிரிநாடு (422, 426, 427, 444, 446, 448), காவேரி வளநாடு (431), புனல்நாடு (428, 447) என்று புகழ்கின்றார். காவிரி நதியையும் அதனாற் சோணாட்டிலமைந்த நிலவளத்தையும் சோற்று வளத்தையும் பாராட்டுகின்றார் (354, 418, 419, 422, 423-5).
தாம் உறைந்த காசிக்குக் கலம்பகம் செய்த இவர் அத்தலத்துள்ள கங்கையின் பெருமைகளை விரிவாகக் கூறியுள்ளார். அது வெண்ணிறமுடையதென்றும், பலதுறைகளையுடையதென்றும் கூறுவர்; அதனை ஆயிரமுகக் கங்கை, சுரநதி, தெய்வக் கங்கை, பாகீரதி, மந்தாகினி, வரநதி என்பர்.
கங்கையும் யமுனையும் வாணிநதியும் சேரும் இடம் திரிவேணி சங்கமமெனப்படும். இவ்வாசிரியர் அங்கே சென்று நீராடயவர். அதன் காட்சி இவருடைய உள்ளத்தைக் கவர்ந்தது. அதனை நான்கு இடங்களில் உவமையாக எடுத்தாளுகின்றார்.
கங்கை வெண்ணிறமும் யமுனை நீலநிறமும் வாணி செந்நிறமு முடையது. இம்முந்நிறமும் கலக்கும் பொருள்களைப் பற்றிச் சொல்லுகையில் திரிவேணி சங்கமத்தை ஒப்புக் கூறுகின்றார்.
வையைநதியில் மகளிர் நீராடுகின்றனர்; அவர்கள் அணிந்த செஞ்சந்தனக் குழம்பையும், கரிய கத்தூரியையும், வெள்ளிய பச்சைக் கருப்பூரத்தையும் வையைநீர் கரைத்
|