98குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

நங்களுக்கு (107) என்பன இவர் செய்யுட்களில் வந்துள்ளன. ஹிந்துஸ்தானிச் சொற்களாகிய சலாம் (6), கபாய் (12, 505) என்பவற்றையும், பிறதிசைச் சொற்களாகிய துரை (29, 72, 83, 93). சலாபம் (48), என்பவற்றையும் இவர் விலக்கின்றி உபயோகிக்கின்றார்.

    இவர் உதித்த ஊராகிய ஸ்ரீவைகுண்டம் ஒரு விஷ்ணு ஸ்தலம். அங்கே வைஷ்ணவர்கள் மிகுதியாக உள்ளனர். அவர்களோடு பழகிய இவருக்கு அவர்களுடைய பரிபாஷைகள் பழக்கமும் இருப்பது இயல்பே. இவர் அவர்கள் பரிபாஷைப்படியே திருமாலைப் பரமவீட்டத்தன் (34) என்றும், வீட்டைத் திருமாளிகை (356) என்றும் கூறுவர். அவர்கள் பரிபாஷையைச் சைவ விஷயங்களிலும் பயன் படுத்துகின்றார். ஸ்ரீவைஷ்ணவர்களைத் ததியரென்றல் பெருவழக்கு; இவர் அச்சொல்லை,

“தவமார், ததியருளத் தானே”
(570)
என்று சைவர்களைக் குறிக்க வழங்குவர். பரந்தாமமென்றும், பரமபதமென்றும் முக்தியைக் கூறுதல் வைஷ்ணவர்களிற் பெருவழக்கு; இவரும் முக்தியைக் குறிக்க அச்சொற்களை ஆளுவர்     (600, 637, 654-5, 671, 692).

அரும்பதங்களும் தொடர்களும்

    இவர் சில அரும்பதங்களும் தொடர்களும் வழங்குகின்றார்; அவை: இரைத்தல் - மோக முறுதல் (74), கலாம் - மயிற்கலாபம் (6, 18, 96), கொங்குரை - பொன் (178), சில - இரண்டு (105, 119, 451), தட்டுமாறல் (13), தயவு (132), திடுக்கம் (197), படலை - தொகுதி (26), புளிறுதல் (104) முதலியன. இவர் வாக்கில் அசும்பு, உச்சிமுச்சி, உவட்டெழுதல், தசும்பசும்பு, மழலைக்குதலை யென்பன பலவிடங்களில் வருகின்றன.

பாண்டிநாட்டுச் செய்திகள்

    பாண்டிநாட்டனராகிய இவர் அந்நாட்டிலுள்ள செந்தில், மதுரை என்னும் இரண்டு தலங்களைப் பற்றியும் இயற்றியுள்ள பிரபந்தங்களில் அவற்றைச் சிறப்பிக்கின்றார். பாண்டிநாட்டின் பெருமை பலவிடங்களிற் கூறப்படுகின்றது. அந்நாட்டைத் தண்டமிழ் நாடென்றும், கன்னிவளநாடென்றும், வைகை வளநாடென்றும், கூறுகின்றார்; அந்நாட்டுக்குரிய பொருநை, வைகையென்னும் நதிகளையும், குமரித்துறை