ஆராய்ச்சி97

பழத்தைப் பழுக்கவைத்தல், புண்ணிற் காரம் வைத்தல், புயங்கொட்டி நடனமிடுதல், பொழிலைக் குத்தகையாகத்தருதல், பொன்னை உரைத்து மாற்றறிதல், மணம்பேசத் தூதரை விடுத்தல், மணமகளைத் தாரை வார்த்துக் கொடுத்தல், மணிமந்திர ஒளஷதங்களால் நன்மை பெறுதல், மருந்துக்கு மாற்றுத் தருதல், மருந்தை உயிர் நீங்கும் வரையிற் கொடுத்தல், மழுவேந்திச் சத்தியம் செய்தல,்வடிகட்டுதல், வீட்டைப் புதுக்கி வெள்ளை தீற்றுதல், வெள்ளத்திற்கு அணைபோடுவார் பாம்பென்னும் வைக்கோற்புரியை உருட்டுதல்.

உலக வழக்குச் சொற்கள்

    உலக வழக்கங்களை அறிந்தமைத்தது போலவே உலக வழக்குச் சொற்களையும் ஏற்புடைய இடங்களில் இம்முனிவர் அமைக்கின்றார். தென்பாண்டி நாட்டினராகிய இவர் வைத்து என்னும் சொல்நடையை உபயோகித்தல் (255, 324) அந்நாட்டு வழக்கு. அலுவல் (காரியம், 72) திரிய (மீட்டும், 206), தோரணம் வைத்தல் (613), முட்டு (முழங்கால், 643) என்பவை பாண்டி நாட்டு வழக்குகள்.

    உலக வழக்கிலே பயின்று வழங்கும் சொற்களும் சொற்றொடர்களும் இவர் வாக்கில் வருவதற்குப் பின்வருவன உதாரணங்களாகும்: அப்பா (161), அமர்க்களம் செய்தல் (694), அருமைப் பிள்ளை (426), அருவருப்பு (451, 534), இந்தா (114), இன்று நாளையிலே (137), இன்றைக் குழந்தை (417), உடுப்பு (539), உளதோ இலையோ (187), எட்டிப் பிடித்தல் (79), ஓடியாடித்திரிதல் (79), கம்முதல் (367), காயம் (659), கிழம் (530), கிழவி (115), குஞ்சு (184), குத்தகை (335), கொட்டிப்போதல் (436), சரக்கு (696) சிணுங்குதல் (441), சிறுபிள்ளை (352), செட்டு (111), செலவாய் விடுதல் (661), திக்கு (416, 686), துவக்குதல் (159), திளையமாடுதல் (401), நாளையின்றென நவிற்றல் (593), நேரிட்டிடப்பட்ட (362), பயல் (621), பரபரப்பு (295), பாவி (383), பிஞ்சு (184), பெண்பிள்ளை (33, 663), பொழுதைக்கு (128), முகப்பு (95, 155, 697), வரத்து (181), வேலை    (90, 690).

    அந்த (345), எந்த (1 : 116), மார் (538), நஞ்சு (நைந்து, 674), என்பன போன்ற மரூஉமொழிகளையும் இவர் ஆள்கின்றார். மலையாள வழக்காகிய சோதித்தல் (வினாதல், 1 : 97),