முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
[மலர்களைக் கொண்டு கட்டப்பெறுவது மலர்மாலையாதல் போலப் பாக்களைக்கொண்டு தொடுக்கப்பெறுவது பாமாலையாகும். மலர்மாலைக்கு மலர்கள் இத்தனைதான் என்று கணக்கில்லாதது போலப் பாமாலைக்கும் பாடல்கள் இவ்வளவுதான் என்று வரையறை செய்யப்படவில்லை. மாலை நூல்கள் எத்துணைப் பாடல்களானும் அமைக்கப்பெறலாம். ஒன்பது பாடல்களால் அமைவது நவமணிமாலையாதல் போல் இம்மாலை எண்ணாற் பெயர்பெறுதலும் உண்டு. இரட்டை மணிமாலை இருபது பாடல்களைக் கொண்டு அமைகிறது. நான்மணிமாலை நாற்பது பாடல்களைக்கொண்டு முடிகிறது. இச்சோணசைலமாலை நூறுபாடல்களைக் கொண்டது. இம்மாலையின் பாடல்கள் முழுவதும் சொற்சுவையும் பொருட்சுவையும் நிறைந்து கற்பவர்கட்கு மிகுந்த இன்பம் பயப்பனவாக விளங்குகின்றன. பாடல்களின் பின்னிரண்டடிகளினும் சோணசைலமாகிய அண்ணாமலையின் பெருமைகளையுஞ் சிறப்புக்களையும் இயற்கை வளங்களையும் மிகுந்தகற்பனையழ கோடு வருணித்துச் சோணசைலனை முன்னிலையாக்கி விளித்துரைக்கின்றார். முன்னிரண்டடிகளினும் தமது குறைகளைக் கூறித் தமக்கு அருள் செய்யவேண்டுமென்று முறைப்பாடு செய்கின்றார்.]

காப்பு
சதுரனெழிற் சோண சயிலற் றுதிப்பன்
மதுரமொழி யன்பர் மனமாங்-குதிரைதிறை
கொண்டவனென் றேத்துங் குரைகழற்கால் யானைதிறை
கொண்டவனை யென்னுளத்தே கொண்டு.
 

சதுரன்-எல்லா வல்லமையுமுடையான், சதுர்-கூத்து. ஐந் தொழில்களையும் தனது கூத்தாட்டினால் நிகழ்த்துபவன் என்பதும் ஒன்று. சதுர்-நான்கு. நான்காவதாகிய துரிய மூர்த்தியாய் நிற்பவனெனினுமாம். எழில்-அழகு. சோணம்-சிவப்பு, ஈண்டு ஆகுபெயராய்த் தீயினை உணர்த்தி நின்றது. சைலம்-மலை. நெருப்பு மலையை வடிவாக வுடையவன். குரைகழல்-ஒலிக்கின்ற வீரக்கழல். மதுரமொழி யன்பர்-இனிய மொழிகளைப் பேசும் அடியவர்கள். மதுரமொழியாவது-துதிப்பாடல்கள் ஏத்துதல்-உயர்த்திக்கூறல். யானை திறைகொண்டவன் என்பது அத்தலத்து மூத்த பிள்ளையாரின் காரணப்பெயர். அதுவருமாறு:-வடதேசத்தினின்று வந்து திருவண்ணாமலையில் வாழ்ந்த முகிலனென்னும் சிற்றரசன் சிவனடியார் முதலிய யாவர்க்கும் தீங்கியற்றலைக் கேள்வியுற்ற குகை நமசிவாயமூர்த்தி “சூலங் கரத்திருக்கச் சோதிமழுவாளிருக்க, ஆலமுண்ட காலத் தருளிருக்க - மேலே, எரித்த விழியிருக்க விந்நாட் சோணேசர், தரித்ததென்ன காரணமோ தாம்.” என்று பாடுதலும் சிவாஞ்ஞையால் அன்றிரவு விநாயகக் கடவுள் யானை உருக்கொண்டு சென்று அச்சுறுத்தியவழி அவன் பேரிடர்ப்பட்டு அத்தீங்கில் நீங்க அவரை வழிபட்டு அவன் கொடுத்த யானைகளை அவர் திறையாகக் கொண்டமையால் யானை திறைகொண்டவர் எனப்பட்டார். விநாயகக் கடவுள் தம்மை வழிபடும் அன்பர்க்கு இடையூற்றை நீக்குதலும் அது செய்யாத வன்பர்க்கு அதனை ஆக்குதலும் பற்றி விக்கினேசுரர் என்னுந் திருப்பெயரும் உடையராகலான், யான் அவரை வழிபட்டு இந்நூலை இடையூறின்றி இனிது முடிப்பேன் என்பார்; ‘என்னுளத்தே கொண்டு துதிப்பன்’ என்றார். குதிரை திறை கொண்டமையும் யானை திறை கொண்டமையும் பிள்ளையாரின் அளித்தலையும், அழித்தலையும் உணர்த்தி நின்றன.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்