முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
10. திருவெங்கைக் கலம்பகம்
எண்சீர்க்கழிநெடிலடி வண்ணவிருத்தம்
புரளுந்திரை யெறியுங்குரை கடலும்பகை தமிழோன்
       பொதியம்பகை மதியம்பகை மதனன்பதை முலைசேர்
தரளம்பகை பனையன்றில்கள் பகையங்குயில் பகையே
       தமரும்பகை யனையும்பகை சகியும்பகை நகர்வாழ்
திரளும்பகை மலர்சிந்திய வணையும்பகை பனிநீர்
       திமிருங்குளிர் களபம்பகை யனிலென்செய வடியேன்
அருளுஞ்சுக மருள்கின்றிலர் பெயர்சங்கர ரெனவே
       யணிவெங்கையி லமர்கின்றவ ரதுமென்குறை யனமே.
(68)
நேரிசை வெண்பா
அந்துவா வென்று மறையே னினைத்தவர்க்கு
வந்துவா வென்று மருவல்போல் - இந்துவாழ்
என்றைக் கடுக்கு மிருஞ்சடைசேர் வெங்கையோய்
என்றைக் கடுக்கு மிதம்.
(69)

68. தமிழோன்-அகத்தியன். பனையன்றில்கள்-பனையில் வாழும் அன்றிற் பறவைகள். தமர்-உறவினர். அனை-அன்னை. சகி-தோழி. திரள்-மக்கள் கூட்டம், திமிரும்-பூசும். சங்கரர்-இன்பத்தைச் செய்பவர். இன்பஞ் செய்பவரென்னும் பெயர் தாங்கியவராயிருந்தும் செய்கின்றாரில்லை யென்பது கருத்து. 69. அம்-அழகிய. துவா-இரண்டு(சிவா). உவந்து-மகிழ்ந்து. இந்து-திங்கள். அடுக்கும்-உண்டாகும். இதம்-நன்மை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்