முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
10. திருவெங்கைக் கலம்பகம்
வண்ணத்தாழிசை
இதயங்கலங்க வினையம்புகன்ற வொருவஞ்சகன்ற னுடனே
       யெனையுந்துறந்து மனையுங்கடந்து தனியங்ககன்ற மகளே
மதியங்கிடந்த முடியன்றயங்க திருவெங்கைவந்து நெடுநாள்
       வரமுன்கிடந்து நினைமுன்பயந்த பயனின்றுகண்ட திதுவோ
புதிதங்கிலங்கு மணியன்றிநைந்த சுடரொன்றிருந்த மனையே
       புகவெம்புகின்ற வடிவம்பரந்த தழல்வெஞ் சுரஞ்செல் வுறுமோ
வதனம்பொலிந்த குமுதம்புலர்ந்து விடிலங்கிருந்த ழுவளோ
       மகள்சென்று முய்ந்திவ் வளவும்புலம்பு மனம்வல்லிரும்பின் வலிதே.
(70)
ஆசிரியத்தாழிசை
வலிய வடியேன் மனத்துவந் தெய்தினான்
மலியு மமுதுணும் வானவர் தேடியே
மெலிய வணுகலா வெங்கையி லீசனே.
(71)
பன்னிருசீர்க்கழிநெடிலடி வண்ணவிருத்தம்
ஈதற மன்று தனித்தே யானுறு கின்ற தலத்தே
       ஏகினை என்கை பிடித்தே யேதமி தெங்கள் குடிக்கே
மீதுறு கொன்றை மணத்தால் வேணியி லிந்து வுருப்போல்
       வீறுகிர் கொங்கை யுறுத்தால் வேல்விழி முந்து சிவத்தால்
கோதித ழின்று வெளுத்தாற் கோளனை கண்டு கறுப்பாள்
       கோதையர் வம்பு தொடுப்பார் கோடுர மஞ்ச ணிறத்தால்
மாதுமை கண்டு கொதிப்பாண் மாபுகழ் வெங்கை புரத்தோய்
       மாறுவை யன்பு பினைத்தான் மாழ்குவ னென்று மிளைத்தே.
(72)
கட்டளைக் கலித்துறை
இளையா திடைமென் முலைசுமந் தேயம் முலையுமின்னங்
கிளையா வுயிருண் டிடவறி யாவிரு கெண்டைகளும்
முளையா நகையிவண் மேல்வெங்கை வாணநின் மொய்ம்பிலன்றி
அளையா நறும்பொடி பட்டதன் றோமிகு மற்புதமே.
(73)

70. வினையம்புகன்ற-பணிமொழி கூறிய. மதியங்கிடந்ந-திங்கள் தங்கிய. தயங்கு-விளங்குகிற. பயந்த-பெற்ற. தழல் வெஞ்சுரம்-தழலைப் போன்ற பாலைநிலம். வதனம்-முகம். உய்ந்து-உயிரோடிருந்து. 71. வலிய-தானாகவே. மலியும்-சுவை நிறைந்த. அணுகலா-நெருங்க முடியாத. 72. அறமன்று-அறமல்ல. ஏதம்-குற்றம். வேணியில்-சடையில். வீறுகிர்-பெருமை பொருந்திய நகம். உறுத்தால்-உறுத்தியிருப்பதால். இதழ்-அதரம். கோளனை-கொடியதாய். கறுப்பாள்-சினப்பாள். வம்பு தொடுப்பார்-அலர்கூறுவார்கள். மாழ்குவன்-வருந்துவேன். 73. கிளையா-கிளைக்கவில்லை. கெண்டைகள்-கெண்டைகளைப் போன்ற விழிகள். மொய்ம்பு-தோள்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்