முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
10. திருவெங்கைக் கலம்பகம்
எண்சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
அரவு முரிகளு மென்புமா லயனோ
       டமரர் தலைகளு முண்கபா லமுநீ
ஒருவி யறுவைபு னைந்துமா லிகைவா
       ளுமிழு மணியணி சந்துமான் மதமே
மருவ வுருவில ணிந்துமா லையிலே
       வருதி மலைதர வந்தநா யகிபோல்
வெருவி யிவளவை நிந்தியா ளலள்காண்
       விமல வெழின்மிகு வெங்கைவாழ் பவனே.
(74)
நேரிசை வெண்பா
வாட்டுபவங் கொல்புகலி வண்புலவன் பேரின்ப
வீட்டுபவங் கொள்ளைகொள விட்டநாள் - கேட்டுவரா
தெப்பிறப்பி லெங்ஙனிருந் தேதுபுரிந் தெய்த்தேனோ
ஒப்பிறப்பில் வெங்கையுடை யோய்.
(75)
வண்ணக் கலித்துறை
உடைய வினைகளை முடுகி யெனதுள மொன்றினோன்
அடைய வறிவெனு மறிவை யருளிடு மண்டர்கோன்
விடைய னரவணை துயிலு மரிதொழும் வெங்கையோன்
சடைய னுமையுறு புடைய னவனடி தஞ்சமே.
(76)
வண்ணத் தாழிசை
தழுவி யணையினு றங்குதாய் தனையு மருகுநெ ருங்கியா
       தரவி னொடுதுயில் கின்றமா தரையு மரிதின கன்றுபோய்
வழுவை யனையம றங்கொள்கா வலர்கள் பதறியெ ழுந்திடா
       வகைபல் கடைகடி றந்துறா மறுகு தொறுமிக வந்துசூழ்
ஒழிவின் ஞமலியி ரைந்திடா துணவு சிதறிய ணங்குபோ
       யுலவு மிருணிறை கங்குல்வா யுனது மருமமு யங்கவே
விழைவி னணையவ ணைந்திலாய் வெருவ விடுவத றங்கொலோ
       விழும மகறிரு வெங்கைவாழ் விமல விதனைவி ளம்பிடே.
(77)

74. உரிகள்-தோல்கள். கபாலம்-மண்டையோடு. ஒருவி-நீக்கி. அறுவை-ஆடை. சந்து-சந்தனம். மான்மதம்-கத்தூரி. வெருவி-அஞ்சி. 75. வாட்டு-வருத்துகிற. பவம்-பிறவி. புகலிவண் புலவன்-திருஞானசம்பந்தர். வீட்டுபவம்-வீடு பேறு. எய்த்தேனோ-இளைத்தேனோ. ஒப்பு இறப்பு-ஒப்பும் இறப்பும். 76. முடுகி-துரத்தி. அறிவெனும் அறிவை-அறிவே சிவமென்னும் அறிவை. விடையன்-காளையை உடையவன். அரவணை-பாம்புப் படுக்கை. புடையன்-இடப்பக்கத்தை யுடையவன். 77. ஆதரவினொடு-அன்போடு. அரிதில்-அருமையாக. வழுவையனைய மறங்கொள்-புலியைப்போன்ற வீரத்தைக்கொண்ட. கடைகள் திறந்து-கதவுகள் திறந்து. ஞமலி-நாய்கள். அணங்கு-பேய். மருமம்-மார்பு. விழைவின்-அவாவினால். அணைய-வர. வெருவ-அஞ்சுமாறு. விழுமம்-துன்பம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்