6. விருத்தகிரி பெரியநாயகியம்மை நெடுங்கழி நெடிலாசிரிய விருத்தம் |
|
|
விழைவொடு நினக்கு மாதுலன் மாமி வெற்புவேண் டுறாதுதன் மருகன் மேலெலா மெலும்புந் தோலுமாய்க் கிடத்தல் வெறுத்திடா திளமைநா டாது பழமலை தனக்குச் சாதியொப் பெனவே பார்த்துனைக் கொடுத்ததுன் றந்தைப் பனிமலை யென்னோ தன்மனை யாட்டி பயந்திடப் பெறாமக ளென்றோ கழைவரை முன்ன ரூன்றுபு நடந்து கடிதுபள் ளங்களின் வீழ்ந்து கரைகளின் மெல்ல வேறிவெண் ணுரைவாய்க் கடையுற வளைந்துருத் திரைந்து கிழவுரு விருத்த நதியெனப் பட்டுக் கீர்த்திமூ வுலகினும் போர்ப்பக் கிளர்மணி முத்த நதியுடை விருத்த கிரியமர் பெரியநா யகியே.
|
(2) |
|
|
காமமென் கின்ற கதுவுவெந் தீயுங் கடுஞ்சின மெனப்படு புலியுங் களிப்பெனுஞ் சிறுகட் புகர்முகப் புழைக்கைக் கறையடிக் களிநல்யா னையுமே தாமிகு மெனது மனமெனும் வனத்திற் றனிவரல் வெருவினை யாயிற் றழலினின் றாடிப் புலிகரி யுரிபோர்த் தடுத்தவாண் டுணையொடும் வருவாய் ஈமவெள் ளெலும்பிங் கிடப்படு மெனத்தா னெலும்பணி கடவுண்மா நதியா யிருந்துநல் லன்னங் கொண்டுமெய் வெளுப்ப விணைதபு கங்கையை யிகழ்ந்து கீழ்மைசொல் கின்ற தொன்றுமின் றாயிற் கிடைக்குமோ விதன்குண மென்னக் கிளர்மணி முத்த நதியுடை விருத்த கிரியமர் பெரியநா யகியே.
|
(3) |
|
|
|
2. வரைகழை-மலையில் வளர்ந்துள்ள மூங்கில். ஊன்றுபு-ஊன்றி. வாய்க்கடை-கடைவாய். வரைகழையென மாற்றுக. உருத்திரைந்து-உருவந்திரைந்து, உருத்து இரைந்து என்க. 3. வெருவினையாயில்-அஞ்சுவாயானால், ஆண் துணை-சிவபெருமான். ஈமம்-இடுகாடு. தடுத்தல்-வென்று உரி கவர்தலின்மேற்று, உரிபோர்த் தடுத்தவெனப் பாடங்கொண்டு கண்ணழிக்கில்மோனை நயமின்மை ஓர்க. இம்மணி முத்தநதி எலும்பிடப்படுமென்று தானும் எலும்பையணியும் தெய்வத்தன்மை பொருந்திய நதியாகி இந்நதி போலவே அன்னங்கொண்டு மெய்வெளுப்ப இருத்தலால் அக்கங்கையை இகழ்ந்து இயம்பும் கீழ்மையொன்றும் இல்லை யென்பீராயின் (கீழ்மையடையாமை மாத்திரத்தானே) இதன் குணம் அதற்குக் கிடைக்குமோவெனக் கூறும்படி கிளர்நதியென்க. அணிதல்-இடப்படுதல். அன்னம்-பிண்டமும், அன்னப் பறவையுமாம். இதன் குணம் சிவசாரூப மளித்த லாதியன. இருந்து-வினையெச்சத்திரிபு.
|
|
|
|