முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
6. விருத்தகிரி பெரியநாயகியம்மை
நெடுங்கழி நெடிலாசிரிய விருத்தம்
நாடினா ருயிர்க ளாமெவற் றினுக்கு
      நல்கிய தந்தையுந் தாயு
நம்பனு நீயு மல்லிர்நும் மூர்க்கே
      நவின்றவம் முறையுளீர் நீவிர்
பாடியா ரணஞ்சொ லீண்டுமாய் வனதாம்
      பரிந்துநீ மடிமிசைக் கிடத்தப்
பழமலை தனது பெயர்வலக் காதிற்
      பகர்ந்தருள் செயப்பெறுஞ் செயலால்
ஓடியோர் காக மேறுபு கவிழ்த்த
      வொருசிறு கரகநீர் தானு
மொருவனோர் செவியால் விடுத்தவப் புனலு
      முமையொரு பாகர்கட் டோன்றிக்
கேடிலா னந்த வுருவமா மெனையொக்
      கின்றன வோவென வதிர்த்துக்
கிளர்மணி முத்த நதியுடை விருத்த
      கிரியமர் பெரியநா யகியே.
(6)
தன்னொரு மகன்வா கனத்தினை வெறுத்தோர்
      தனயன்வா கனத்தினை விரும்புந்
தண்மணிப் பணியு மதனையுள் வெருவித்
      தான்வள ராமதி யமும்வாழ்
மின்னவிர் சடையான் றனை நினை யன்றி
      மேவுவா னவரைநெஞ் சுன்னல்
விரிகதிர் விழுங்கு மணியினை விடுத்து
      வெறுமணி கொள்ளுமா றன்றோ
மன்னவர் மனிதர் சந்திரன் பரிதி
      மகபதி மலரயன் மறலி
வானவர் வசுக்கள் சித்தர்கிம் புருடர்
      மாதவர் விஞ்சைய ரசுரா
கின்னர ருரகர் மூழ்குபே ரரவங்
      கேட்டொரு முராரிபாய் சுருட்டக்
கிளர்மணி முத்த நதியுடை விருத்த
      கிரியமர் பெரியநா யகியே.
(7)

6. எனையொக்கின்றனவோ என அதிர்த்து-எனக்கு ஒப்பாக இருக்கின்றனவோ என்று ஆரவாரித்து விருத்தகிரிக்கண் மாய்வனவாகிய உயிர்கள் பெறுஞ்செயலால் நாடின் நும் மூர்க்கு நவின்ற அம்முறையே நீவிருள்ளீர்; ஆகலின், எவ்வுயிர்க்கும் நீவிர் தந்தையுந் தாயும் அல்லீர்; என நிந்தாஸ்துதியின் வைத்து அத்தலத்திலருளுமாறு நிகழ்த்தியவாறு. ஒருவனென்றது சன்னுமுனிவரை. 7. நெஞ்சு உன்னல்-மனது நினைத்தல். வெறுமணி-ஒளியில்லாத மணி. மகபதி-இந்திரன். மறலி-நமன். உரகர்-நாகர்.அரவம்-ஒலி. முராரி-முரன் உன்னும் அசுரனை அழித்த திருமால். பாய்சுருட்டல் பாற்கடலொலியினும் இவ்வொலி மிக்கிருத்தலாலென்க.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்