முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
6. விருத்தகிரி பெரியநாயகியம்மை
நெடுங்கழி நெடிலாசிரிய விருத்தம்
பண்டுநின் கொழுநன் றந்தையுந் தாயும்
      பயந்ததம் மருமருந் தன்ன
பாலனைக் கொன்று சமைத்திடக் கொள்ளும்
      பாதக மொன்றுளங் கொண்டு
தொண்டர்தம் மனையிற் செல்வனென் றெழநின்
      சுதனழப் பொறாதுநின் முலைப்பால்
சுரந்தமு தூட்டு மன்னைநீ யாவாய்
      தொழுதுபோய்ப் பிரித்திலை யென்னோ
அண்டர்தங் கங்கை யன்னமங் கதன்க
      ணாடல வாகிவந் தடையா
வாடியிங் கிதன்க ணமர்வுறப் பெறலா
      லடைந்துவான் கங்கையை யிகழ்ந்து
கெண்டையொண் வாளை யுடனெழக் குதிப்பக்
      கிளைவளைக் கமுகின்மேற் றவழக்
கிளர்மணி முத்த நதியுடை விருத்த
      கிரியமர் பெரியநா யகியே.
(9)
புரிசடைக் காட்டு ளாடவிட் டிளவம்
      புலியினைச் சிறப்புலி யொடுகோட்
புலிதொழ விருக்கு மொருபெருந்
      தெய்வப் புலிபனி மலையிளமானைப்
பரிவுறத் தொழுது மருவிய வதனாற்
      பயமறச் சாதிக டனது
பாங்கர்வந் தெய்தப் பெற்றதென் றறிந்து
      பசுவெலா மருவுறப் பெறுமே
சுரிகுழற் கயற்கட் பிறைநுதற் கனிவாய்த்
      துடியிடைக் குவிமுலைத் தளிர்க்கைத்
துணைவிமுற் கங்கை பெயர்சொலக் கூசுஞ்
      சுடர்மணிக் கட்செவிப் பணியான்
கிரிமகட் கெடுத்தக் கறைமிடற் றிறைவன்
      கிளக்குமெற் புகழெனத் தோன்றிக்
கிளர்மணி முத்த நதியுடை விருத்த
      கிரியமர் பெரியநா யகியே.
(10)

9. கொள்ளல்-ஏற்றல். ஆடலவாகி இங்கு இதன்கண் அடையா ஆடி அமர்வுறவெனவும், கெண்டை குதிப்ப எனவும் இயையம். 10. இச்செய்யுளில் சிவபிரானைப் புலியாக வருணித்திருப்பது எண்ணி மகிழத்தக்கது. கோட்புலி-கோட்புலிநாயனார். புலி மானைத்தொழுது மருவியிருத்தலால் அம்மான் தனதினமாகிய பசுக்கள் தன்பாங்கரடைந்து தன்னால் அப்புலியைப் பயமற எய்தப் பெற்றதாயிற்று என்றறிந்து அப்பசுக்களெல்லாம் அம்மானால் அப்புலியை அடையப் பெறுகின்றன வென்றது, திருவருட்சத்தியானே ஆன்மாக்கள் சிவத்தையடைய வேண்டுமென்னும் சித்தாந்த நோக்கியென்க. தனதென்றது சத்தியையும், சாதிகளென்றது ஆன்மாக்களையுமாம். தேவியார்முன் கங்கையின் பெயரையுஞ் சொல்லாத கடவுள், அத்தேவியார்க்கு எனது புகழை எடுத்துக் கிளக்குமென்று ஆரவாரித்து அக்கங்கைபோலத் தான் மறையாது வெளிப்பட்டு விளங்கும் இந்நதியென்றலும் அத்தல மான்மியங் குறித்தென்க.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்