1573. வருந்தேன் மகளிர் எனைஒவ்வார்
வளஞ்சேர் ஒற்றி மன்னவனார்
தருந்தேன் அமுதம் உண்டென்றும்
சலியா வாழ்வில் தருக்கிமகிழ்ந்
திருந்தேன் மணாளர் எனைப்பிரியார்
என்றும் புணர்ச்சிக் கேதுவிதாம்
மருந்தேன் மையற் பெருநோயை
மறந்தேன் அவரை மறந்திலனே.
உரை: ஏனை மகளிர் எனக்கு ஒப்பாகாராதலால் நான் இனி வருந்தேன்; வளம் பொருந்திய திருவொற்றியூர்த் தலைவராகிய தியாகப் பெருமான் தந்தருள்கின்ற தேனினுமினிய அருளமுதம் உண்டு, என்றும் கெடுதலில்லாத வாழ்வில் பெருமிதமுற்று மகிழ்ந்திருக்கின்றேன்; என் மணவாளராகிய அவர் என்னை ஒருபோதும் பிரியார்; இன்பப் புணர்ச்சி எய்துதற்குக் காரணம் இதுவேயாம்; இனி எனக்கு ஒரு மருந்தும் வேண்டா; காம மயக்கம் தரும் பெரிய நோயையும் மறந்தேனாயினும் அவரை மறவேன். எ.று.
திருவருட் பேற்றால் மகளிர் எல்லோருள்ளும் உயர்ந்தமையின் வருந்துதற்கு இனி இடமில்லை எனச் செம்மாக்கின்றாளாதலால் “வருந்தேன் மகளிர் எனை ஒவ்வார்” என உரைக்கின்றாள். தியாகப் பெருமான் தருவது திருவருள் ஞான இன்பமாதலின், அதனைப் பெற்று மகிழ்கின்றமை தோன்ற “ஒற்றி மன்னவனார் தரும் தேனமுதம் உண்டு” எனவும், “திருவருள் இன்பவாழ்வு” எனவும், எவ்வாற்றாலும் பொன்றாப் பெருவாழ்வாதலின் “என்றும் சலியா வாழ்வில் தருக்கி மகிழ்ந்து இருந்தேன்” எனவும் இசைக்கின்றாள். திருவருளின்பப் பேறு எய்தினார் பின்னர்ப் பிரிவதிலராதலின் “மணாளர் எனைப் பிரியார்” என மகிழ்கின்றாள். இக் கருத்தே தோன்ற “மேவினார் பிரிய மாட்டா. . . . . விமலனார்” என்று சேக்கிழார் பெருமான் கூறுவர். இடையறவின்றி நுகரும் சிவபோகம் இதுவென வற்புறுத்தற்கு “என்றும் புணர்ச்சிக்கு ஏதுவிதாம்” எனக் கூறுகிறாள். நோயுற்றார்க்கு மருந்து வேண்டப்படுவது போல, நான் இதுகாறும் எய்திய காதற் பெருநோய்க்குரிய மருந்துண்டு மகிழ்கின்றேனாதலால், இனி ஒரு மருந்தும் வேண்டேன் என்பாள் “மருந்தேன்” எனவும், “மையற் பெருநோயை மறந்தேன்” எனவும் வகுத்துரைக்கின்றாள். உற்ற நோயை மறக்கும் மனம் இன்பத்துக் கேதுவாகிய தலைவனையும் மறப்பிக்கு மன்றோ எனத் தன் கூற்றைச் செவியேற்கும் தோழி அயராமைப் பொருட்டு “அவரை மறந்திலனே” என யாப்புறுக்கின்றாள்.
இதனால், திருவருட் புணர்ச்சி யின்பம் புகன்றவாறாம். (10)
|