1575. பித்தர் எனும்பேர் பிறங்கநின்றார்
பேயோ டாடிப் பவுரிகொண்டார்
பத்தர் தமக்குப் பணிசெய்வார்
பணியே பணியாப் பரிவுற்றார்
சித்தர் திருவாழ் ஒற்றியினார்
தியாகர் என்றுன் கலைகவர்ந்த
எத்தர் அன்றோ மகளேநீ
ஏதுக் கவரை விழைந்தனையே.
உரை: மகளே, நீ காதலிக்கும் சிவபெருமான் பித்தர் எனப்படும் பெயர் விளங்குபவர்; பேய்கள் சூழ்ந்து நிற்ப அவற்றோடு கூத்தாடுபவர்; பத்தி செய்பவர்க்குத் தொண்டு செய்பவர்; பாம்புகளையே பூணாரமாக அணிந்து மகிழ்பவர்; சித்தர்கள் பரவும் செல்வ மிக்க திருவொற்றியூரவராயினும், தியாகர் என்று சொல்லிக் கொண்டு உன் ஆடையைக் கவர்ந்து கொண்ட எத்தரல்லவா; அவரை நீ எதற்காக விரும்புகின்றாய். எ.று.
நம்பியாரூரரைத் தடுத்தாட்கொண்ட போது அவர் 'பித்தனோ மறையோன்' என்று ஏசினாராதலால் அவர்க்குப் பித்தன் என வொரு பெயருண்டாயிற்று. நம்பியாரூரரும் தாம் பாடிய முதற் பதிகத்தில் எடுத்த எடுப்பில் பித்தா என்று பாடினமையின் “பித்தர் எனும் பேர் பிறங்க நின்றார்” என வுரைக்கின்றாள். பிறங்குதல் - விளங்குதல். பவுரி - கூத்து. Êசிவனை இகழ்கின்ற குறிப்பால் பேய்க்கணம் சூழ நின்றாடுவது பற்றி “பேயோ டாடிப் பவுரி கொண்டார்” எனப் பேசுகிறார். தன்பால் அன்பால் பத்தி பண்ணுபவருக்குத் தொண்டு செய்யும் இயல்பினராதலால் “பத்தர் தமக்குப் பணி செய்வார்” எனப் பகர்கின்றார். பணி - தொண்டு, பாம்பு. பூணாரம் எனப் பலபொருள் தரும் சொல்லாகும். பரிவுற்றார் - விரும்பினார். சித்தர் - அணிமா, மகிமா முதலிய சித்திகளைச் செய்பவர். திரு - செல்வம்; திருமகளுமாம். தியாகர் - உரிய எல்லாவற்றையும் பிறர்க்கு உதவுபவர். சிவனது திருவுருவத்தைக் கண்டு காதலுற்ற போது இடையில் உடுத்த ஆடை நெகிழ்ந்தமைக்குக் காரணம் சிவனது கவர்ச்சியால் உளதாயது எனக் கருதுகின்றாளாதலின் “தியாகர் என்றுன் கலை கவர்ந்த எத்தர்” என இகழ்கின்றார். கலை - உடை. தியாகர் என்று பெயர் வைத்துக்கொண்டு உனது உடையைக் கவர்கின்றாராதலால் “உன் கலை கவர்ந்த எத்தர்” என்று கூறுகிறார். எத்தர் - ஏமாற்றுபவர். இத்தகைய இயல்பும் செயலுமுடையவர் மேல் நீ எவ்வாறு காதல் கொண்டாய்; இது தகாது என்பாளாய், “மகளே நீ ஏதுக்கவரை விழைந்தனையே” என விளம்புகிறார். (2)
|