பக்கம் எண் :

2517.

     மாசகன்ற சிவமுனிவர் அருளாலே
          மானிடமாய் வந்த மாதின்
     ஆசில்தவப் பேறளிக்க வள்ளிமலை
          தனைச்சார்ந்தே அங்குக் கூடி
     நேசமிகு மணம்புரிந்த நின்மலனே
          சிறியேனை நீயே காப்பாய்
     தேசுலவு பொழில்சூழும் சிங்கபுரி
          தனில் அமர்ந்த தெய்வக் குன்றே.

உரை:

      ஒளி பொருந்திய சோலை சூழ்ந்த சிங்கபுரியில் கோயில் கொண்டருளும் தெய்வக் குன்றமே, குற்றமில்லாத சிவ முனிவர் அருள் நோக்கால் மான் வயிற்றில் மானுட மகளாய் வந்த பெண்ணாகிய வள்ளியம்மையார்க்குக் குறையில்லாத தவப் பயனை யளித்தற்கு வள்ளி மலையையடைந்து அங்கே அவளைக் கூடி அன்பு மிக்க களவு மணம் செய்து கொண்ட தூயவனே, சிறியவனாகிய என்னைக் காத்தருள்வாயாக. எ.று.

     மனமாசில்லாத முனிவர் என்றற்கு “மாசகன்ற சிவமுனிவர்” எனவும், அவர் காண எதிரே போந்த அழகிய மானை அவர் நோக்கிய செவ்வி கண்டு அதன் வயிற்றில் மானுடக் குழவியாய்த் தோன்றினாளாகலின், வள்ளிநாயகியை, “சிவமுனிவர் அருளாலே மானிடமாய் வந்த மாது” எனவும் இசைக்கின்றார். முன்பு திருமாலுடைய மகளாய்ச் சுந்தரவல்லியென்ற பெயருடன் முருகப் பெருமானை மணந்து கோடற்கு அரிய தவம் புரிந்த வரலாறு விளங்க, “ஆசில் தவப் பேறளிக்க” எனக் கூறுகின்றார். ஆசு - குற்றம் வள்ளிமலைச் சாரலில் புனங்கா வல்புரிந்த வள்ளி நாயகியைக் கண்டு களவிற் கூடினமையின் “வள்ளிமலை தனைச் சார்ந்தே அங்குக் கூடி” எனவும், பின்னர்ச் சுற்றம் போற்றத் திருமணம் செய்து கொண்டது பற்றி, “நேசமிகு மணம் புரிந்த நின்மலனே” எனவும் இயம்புகின்றார். திருமணத்தால் அன்பு மிகுவது பற்றி “நேசமிகு மணம்” என்கின்றார். நின்மலன் - இயல்பாகவே மலமில்லாத தூயவன் பிணியாற் சிறுமை யுற்றமையின், “சிறியேன்” என்றும், பிணி நீக்கி யருளல் வேண்டும் என்றற்கு, “நீயே காப்பாய்” என்றும் இசைக்கின்றார். பசுமையால் சோலைகட்கு உளதாகும் ஒளி இங்கே “தேசு” எனப்படுகிறது.

     இதனால் முருகப் பெருமான் வள்ளிநாயகியை மணந்தருளிய வரலாறு கூறித் தனக்குற்ற பிணி நீக்கி அருளுக என வேண்டியவாறாம்.  

     (11)