2519. வாதாகா வண்ண மணியேஎம் வல்லபைதன்
நாதாகா வண்ண நலங்கொள்வான் - போதார்
வனங்காத்து நீர் அளித்த வள்ளலே அன்பால்
இனங்காத் தருளாய் எனை.
உரை: எம்முடைய அழகிய மாணிக்க மணி போல் திருமேனியையுடையவனே; வல்லபையென்னும் தேவிக்குக் கணவனே; சோலைகள் நல்ல வண்ணமும் வளமும் பெறும் பொருட்டுப் பூக்கள் பொருந்திய இந்திரன் அமைத்த நந்தவனத்தைக் காத்து நீர் பெருகுவித்த வள்ளலே, என்னையும் என்னினத்து அடியாரையும் காத்தருள்க; காலம் தாழ்க்கு மாற்றால் வாது செய்தல் வேண்டா. எ.று.
மாணிக்கமணி போற் சிவந்த திருமேனி யுடையனாதலின் விநாயகப் பெருமானை “வண்ண மணியே” எனக் கூறுகின்றார். “துப்பார் திருமேனித் தும்பிகையான்” (வாக்கு) என்பர் ஒளவையார். வல்லபை, வினாயகப் பெருமானுக்கு அருட் சத்தி. நாதன், கணவன். வண்ணம் - பசுமை; நலம் - நறுமலரும் இன்கனியும் தண்ணிழலும் பொருந்திய வளம். போதார் வனம், பூக்கள் நிறைந்ததும், இந்திரனால்,அமைக்கப் பெற்றதுமான நந்தன வனம். இந்திரன் வேண்ட நீர் வளம் பெறுவித்ததை, “சுர குலாதி பன் தூமலர் நந்தனம் பெருக வார்கடல் பெய்த வயிற்றினோன்” (பிரபு) என்று துறைமங்கலம் சிவப் பிரகாச அடிகள் உரைப்பது காண்க. வாது - ஈண்டுக் காலம் தாழ்ப்பது குறித்தது. இனம் சூழ வாழ்தல் அறமாகலின், “இனம் காத்தருள்வாய்” என வேண்டுகின்றார்.
இதனால் தன்னையும் தன் இனத்தையும் காத்தருள்க எனவேண்டியவாறாம். (2)
|