பக்கம் எண் :

1. பரசிவ வணக்கம்

குறள் வெண்பா

3267.

    எல்லாம் செயல்கூடும் என்னாணை யம்பலத்தே
    எல்லாம்வல் லான்ற னையே ஏத்து.

உரை:

     தில்லையம்பலத்தில் எழுந்தருளும் எல்லாம் வல்லவனாகிய சிவபெருமானையே பரவி வழிபடுக; வழிபட்டால் எத்தகைய அரிய செயல்களும் நிறைவுறும்; இஃது என் மேல் ஆணை. எ.று.

     ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற செயல்வகை அனைத்தையும் எளிதில் இனிது செய்யும் வல்லாளன் என்பது உணர்த்தற்குச் சிவனை “எல்லாம் வல்லான்” என்றும், அவன் தில்லையம்பலத்தில் கண்டு வணங்கப்படுதல் விளங்க, “அம்பலத்தே” என்றும் இயம்புகின்றார். எல்லாம் வல்ல அகளப் பரசிவம், தில்லையம்பலத்தில் கூத்தாடும் சிவனாய்ச் சகளத் திருமேனி கொண்டு காட்சி தரும் நலம் கூறி, அவனது திருவருள் பெற்ற வழி நாம் செயற்கு அரியது ஒன்றும் இல்லை என்பாராய், “எல்லாம் செயல் கூடும்” எனவும், இக்கூற்றை வலியுறுத்தற்கு “என் ஆணை” எனவும் இயம்புகின்றார். “வினை கெடுதல் ஆணை நமதே” (நனிபள்ளி) எனவும், “வானிடை வாழ்வர் மண் மிசைப் பிறவார் மற்றிதற் ஆணையும் நமதே” (கழுமலம்) எனவும் ஞானசம்பந்தர் ஆணை கூறுவது காண்க.

     இதனால், எல்லாம் வல்லவனாகலின் இறைவனை ஏத்தினால் யாதனையும் செய்யும் வன்மை யுளதாம் என்றதாம்.

     (1)