Primary tabs
திருவருட்பா
ஆறாம் திருமுறை
பணிவுரை
புலவர் நாகசண்முகம்
சிறப்பு அலுவலர் திருவருட்பாப் பதிப்பு
தமிழன்னையின் பாதச் சிலம்புகளில் சங்க காலத்தில்
காதலும் வீரமும் கனிவோடும் துணிவோடும் ஒலித்ததுபோல
இடைக்காலம் தொடங்கி, பக்தியும் பரவசத்தோடு ஒலிக்கத்
தொடங்கியது.
ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழன்னையின் பாதச்
சிலம்புகளின் பக்திப் பரல்களாக விளங்கியதோடு
வானத்து இறைவனின் வண்ணக்குழந்தைகளாகவும்
விளங்கினார்கள்.
அவர்களின் பாக்கள் பக்தி மணமும் பைந்தமிழ் வளமும்
கொண்டவை என்பதோடு வரலாற்றுக் கருவூலங்களாகவும்
பண்பாட்டுப் பெட்டகங்களாகவும் காலக்
கண்ணாடிகளாகவும் விளங்குகின்றன.
அவர்கள் போட்டு வைத்துள்ள பொற்பாதையில் நாம்
நடக்கின்ற போது, மீண்டும் இரு பெரும் தெய்வீகப்
பெருமக்களின் தரிசனம் நமக்குக் கிடைக்கிறது. அதனால்
அருள் கிடைக்கிறது. அன்பு கிடைக்கிறது. பண்பு
பிறக்கிறது.
அவர்களில் ஒருவர், அனைவருக்கும் அன்னையாய் நின்று
ஒளிரும் தாயுமானவர். மற்றொருவர் அனைவருக்கும் அருள்
வள்ளலாய் அருட் பெருஞ் சோதியாய் நின்றொளிரும்
இராமலிங்க சுவாமிகள்.
வள்ளல் பெருமான் ஆன்மநேயம் என்ற முற்றிலும் புதிய
கொள்கையை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அருட்
பெருஞ் சோதி என்ற அணையா விளக்கை ஏற்றினார்.
அந்தத் திருவிளக்கு வடலூர் என்ற திரு ஊரில்
ஏற்றப்பட்டதெனினும் அதன் ஒளி வான் முகட்டைத் தழுவி,
வையம் எங்கும் வியாபித்தவண்ணம் உள்ளது.
வள்ளல் பெருமானின் திருவாக்காக உருவாகி அருட்பாவாய்
மலர்ந்த பாக்கள் அனைத்திற்கும் அருள்வேந்தர்
பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் உரைவேந்தர் ஒளவை
அவர்களைக் கொண்டு உருவாக்கிய வரலாற்றுமுறை உரை,
தட்டெழுத்தில் பல ஆயிரம் பக்கங்களாகப் பரந்து
விரிந்து சிறந்து விளங்கியது. அதனை நூல் வடிவாக
உருவாக்கும் பணியினை அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
தொடங்கியபோது அச் செம்பணிக்கு என்னை ஆளாக்கிய, என்
அருமைக்கும் பெருமைக்கும் ஏற்றுதலுக்கும்
போற்றுதலுக்கும் உரிய, என்பால் என்றென்றும் மாறாத
நேயமும் கொண்ட முன்னாள் இணைவேந்தர் செட்டிநாட்டரசர்
முத்தையவேள் அவர்களின் அன்பையும் அருளையும்
எப்போதும் நினைப்பதோடு இப்போது நினைத்தும் நெஞ்சம்
சிலிர்க்கின்றேன்.
சுருங்கச் சொன்னால் பொருள் வள்ளலான செட்டி
நாட்டரசர் பெருமான், அருள் வள்ளலிடம் பணியாற்றும்
வாய்ப்பை எனக்கு நல்கினார்கள் என்றே இப் பொற்
பணிதனை இயம்புதல் வேண்டும்.
என் பதிப்புப் பணிகளில் கலை நோக்கமும் கவின்
நுட்பமும், உள்ளது என்று மனதாரப் பாராட்டி எந்
நாளும் ஆக்கமும் ஊக்கமும் தந்து தாய்போல் அன்பும்
காட்டிவருகின்ற நம் இணைவேந்தர் அண்ணல் எம். ஏ. எம்.
இராமசாமி அவர்களும் என்னை இப் பணிக்கு ஆளாக்குவதில்
பேரன்போடு உதவினார்கள்.
இந்த அற்புதத் திருப்பணிக்கு என்னை ஆற்றுப்படுத்திய
பெருமைக்கு உரியவர்கள் அருமைக்குரிய சகோதரர்
திருமிகு A. R. ராமசாமி அவர்கள் ஆவார்கள்.
இந்த வாய்ப்பினை நான் விரைந்து பெற உதவியவர்கள்
முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் லெ. ப.
கரு. இராமநாதச் செட்டியார் அவர்களும் இந் நாள்
தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் ஆறு. அழகப்பன்
அவர்களும் ஆவார்கள்.
இப் பணி சிறப்புற நிறைவெய்த அவ்வப்போது தக்க
யோசனைகள் வழங்கிப் பல்லாற்றாலும் உதவிய பல்கலைக்
கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இராமசேது நாராயணன்
அவர்களின் பேரன்பு என்றென்றும் மறக்க இயலாததாகும்.
போற்றி வணங்குதற்குரியதாகும்.
திருவருட்பாப் பதிப்புப்பணி என்ற நெடும் பயணத்தில்
உற்ற துணையாக நின்றவர்கள் பல்கலைக் கழகப் பதிவாளர்
இராசமாணிக்கம் அவர்களும் நூல் வெளியீட்டுத் துறை
சிறப்பு அலுவலர் லெட்சுமணன் அவர்களும் மாருதி
அச்சகத்துத் தம்பிகள் பார்த்திபன், ஹரிஹரன்
ஆகியோரும் ஆவார்கள்.
மேற்குறித்த பெருமக்கள் அனைவருக்கும் என்
பணிவுமிக்க வணக்கத்தை, அன்புகலந்த நன்றியை
உரிமையாக்குகின்றேன்.
நற்பணியாம் இப் பணிக்கு என்னை ஆளாக்கிய தோன்றாத் துணைவனான தில்லையம்பலவாணனின் பொற்பாதங்களைப் போற்றி ஏற்றித் துதிக்கின்றேன்.
வணக்கம்.