Primary tabs
திருவருட்பா
ஆறாம் திருமுறை
நிறைவுரை
பேராசிரியர் ராம. சேதுநாராயணன்
துணைவேந்தர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
உலகில் கோடானுகோடி உயிரினங்கள் உள்ளவாயினும், அவற்றுள் மானிடப்
பிறவியே, மிக மிக
அருமையுடையதாகவும் பெருமையுடையதாகவும்
விளங்குகின்றது. அதனாலேயே அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல்
அரிது என்று
ஆன்றோர் உரைத்தனர்.
இதனை உணர்ந்தே ஒளவையாரும்
என்று பாடிச் சென்றுள்ளார்.
அவ்வாறு பிறக்கும் மனிதருள்ளும் பல்லாயிரவருள் ஒருவரே, தமக்கென்று வாழாமல் பிறருக்கென்று வாழுகின்ற பீடுமிக்கவர்களாக, மண்ணகத்தின் தெய்வ மாந்தர்களாக அவதரிக்கின்றார்கள். அத்தகைய ஞானியாக, வழியறியாது தவித்த மக்கட்கெல்லாம் வழிகாட்டும் ஒளியாகத் தோன்றி, ஆன்மநேயம் என்ற வான்புகழ் கொள்கையை உலகிற்கு அறிமுகம் செய்து, உலகம் முழுவதையும் ஒரு குடைக்கீழ் கொண்டு வருதற்பொருட்டு, அருளாட்சி செய்த பெருமகனாரே வடலூர் இராமலிங்க சுவாமிகள் ஆவார்கள்.
கனி ஒன்றின் பொருட்டுக் கடும் சினம்கொண்டு, பழனித்தலம் மேவிய திருமுருகன், ஒளவைப் பெருமாட்டியாருக்கு ஞானக்கனியை நல்கியது போல, வடலூர் வள்ளல் பெருமானுக்கும் ஞானச் சுடர் தந்து தமிழ்க் கனி நல்கி அருள்பாலித்தார்.
தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் என்ற வாக்கினை மெய்ப்பிக்க, இறைவன் கொடுத்த ஞானச் செல்வத்தைக்கொண்டு இடையீடின்றி மக்களுக்குத் தொடர்ந்து அருட் செல்வங்களை வழங்கி, வடலூர்ப் பெருமான் வள்ளல் ஆனார்.
என்பது தெய்வப்புலவரின் திருவாக்கு.
வள்ளல் பெருமான் சிறந்தவற்றையே எண்ணி, சிறந்தவற்றையே சொல்லி, அவை யாவையும் மக்களுக்குப் பயன்படுமாறு செயலாக்கியவர் ஆவார்.
இலக்கியம், பக்தி, வரலாறு என்று எந்த நோக்கில் பார்த்தாலும் வடலூர் வள்ளல் பெருமான் காலம் பத்தரைமாற்றுப் பசும்பொன் முத்திரை பதித்த காலமாகத் திகழ்கின்றது.
வள்ளல் பெருமான் உலக மக்களின் நலத்தினைக் கருதியே உள்ளம் உருகி ஒப்பிலா ஆனந்தப் பெருவெளியில் நின்று, திருஅருட்பாப் பாக்களைப் வழங்கி, நம்மையெல்லாம் வாழ்வாங்கு வாழவைத்துள்ளார்.
திருவருட்பாப் பாடல் ஒவ்வொன்றும் ஒப்பற்ற கருத்துச் சுடராக, அது தரும் அருள் ஒளியாக விளங்குகின்றது.
வள்ளலார் ஏற்றிய பேரொளிதனை, நெய் வார்த்துக் காத்தல் போல அவர் நெறி நின்று ஒழுகும் அருட் செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் அவர்கள் திருவருட்பாவிற்கு உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்களைக் கொண்டு வரலாற்று முறைப்படி உரை எழுதச் செய்தார்கள்.
அவ் வுரையுடன் கூடிய திருவருட்பாவினை, சீரோடும் சிறப்போடும் நூலாக வெளியிடுவதற்கு, அண்ணாமலைப் பல்கலைக்கழகமே ஏற்றது என்று எண்ணிய அருட் செல்வர் மகாலிங்கம் அவர்கள், திருவருட்பா உரைப் பகுதிகள் அனைத்தையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் இணைவேந்தரும் ஒப்புயர்வற்ற பெருவள்ளலுமான செட்டிநாட்டரசர் முத்தையவேள் அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.
அரசர் பெருமானும் பெருவிருப்புடன் அந் நற்பணியினை ஏற்றுக்கொண்டமையால் திருவருட்பா உரைப் பதிப்பின் முதல் தொகுதி பல்கலைக்கழகப் பொன்விழாவில் வெளியிடப்பெற்றது.
இந்தப் பொற் பணிக்குக் காரணமான அருட்செல்வர் மகாலிங்கம் அவர்களுக்கும் செட்டி நாட்டரசர் முத்தையவேள் அவர்களுக்கும் தமிழ் உலகமும் ஆன்மிகப் பேருலகமும் என்றும் கடப்பாடுடையன.
பின்னர் தமிழக அரசு அறநிலையத்துறையின் உதவியோடு திருவருட்பா உரைப்பகுதிகள் தொடர்ந்து பதிப்பிக்கப்பெற்று மதிப்பிற்குரிய டாக்டர் ம.பொ. சிவஞானம் அவரக்ள் தலைமையில் மதிப்பிற்குரிய இராம. வீரப்பன் அவர்களால் 2, 3, 4, 5ஆம் தொகுதிகள் வெளியிடப்பட்டன.
தொடர்ந்து 6, 7, 8, 9 ஆம் தொகுதிகள் வெளிவந்தன. பல்கலைக் கழக வைர விழாச் சமயத்தில் இப் பதிப்பின் நிறைவுத் தொகுதியான பத்தாம் தொகுதிப் பதிப்புப்பணி நிறைவுபெறுகின்றது.
திருவருட்பா ஆன்மீகக் கருத்துக்களை கொண்ட கருவூலம் மட்டும் அல்ல. நாட்டிற்கு இன்று இன்றியமையாத தேவையான ஒருமைப்பாட்டு உணர்வினையும் மக்களுக்கு உணர்த்தும் நன்னூல் ஆகும்.
இக் கருத்தினை வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூல் மூலம் சிலம்புச் செல்வர், தமிழ் அறிஞர் டாக்டர். ம. பொ. சிவஞானம் அவர்கள் தமிழ் உலகிற்கு வழங்கியுள்ளார்கள்.
அந்த அரிய கருத்துக்கள் உலகம் எங்கும் பரவவேண்டும் என்ற பெருவிருப்பத்துடன், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறைப் பேராசிரியர் கணபதி அவர்களைக் கொண்டு, அந் நூலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து The Universal Vision of Saint Ramalinga என்ற தலைப்பில் பல்கலைக்கழகம் வெளியிட்டிருப்பது உலகம் அறிந்ததே.
பத்தாம் தொகுதியான இத் தொகுதியில் அருட்பெருஞ்சோதி அகவல் தொடங்கிச் சத்திய அறிவிப்பு, உள்ளடக்கிய அறுபத்து நான்கு பகுதிகளும், 1204 பாடல்களும் இடம் பெற்றுள்ளன.
இத் தொகுதியுள் வள்ளல் பெருமான் தோன்றாத் துணையான இறைவனை எத்தனை நுட்பமான நோக்குகளால் காண்கிறார், நம்மைக் காணச் செய்கிறார் என்பதனை நினைக்கும்போது நெஞ்சம் சிலிர்க்கிறது.
எத்தகு அளவையாலும் அளக்கமுடியாதவன் இறைவன் என்று வள்ளலார் பல இடங்களில் வரையறுத்தாலும்கூட அவன் அருள் வடிவானவன் என்பதனை அழகாக, அருள்! அருள்! என ஆசையோடு அடுக்கி ஆனந்தத்தோடு பாடியுள்ளார்.
என்று அருட்பெருஞ் சோதியாக இறைவனைக் கண்ட வள்ளல் பெருமான், தம் திருவருட்பாப் பாக்களால் தனிப்பெரும் சோதியை ஏற்றி அனைவரின் அக இருளையும் போக்கி நமக்குப் புதுவழி காட்டியுள்ளார்.
இந்த உயர்வு மிக்க உரைப் பதிப்புத் தொகுதிகள் மூலம் திருவருட்பாப் பாடல்களில் ஒளிரும் தெய்வக் கருத்துக்கள் உலகம் எங்கும் பரவி, மக்கள் பெரும் பயன்பெறவேண்டும் என்பதே பல்கலைக் கழக இணைவேந்தர் டாக்டர் எம். ஏ. எம். ராமசாமி அவர்களின் சீரிய எண்ணம் ஆகும். எனது பெருவிருப்பமும் அதுவே ஆகும்.
இந்த நற்பணியில் தொடர்ந்து பங்குகொண்டு வந்த அனைவருக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். முக்கியமாக இந்தப் பகுதிகள் அனைத்தையும் பதிப்பிப்பதற்குச் சிறப்பு அலுவலராக இருந்து பணியாற்றிய புலவர் நாகசண்முகம் அவர்கட்கும் சிறந்த முறையில் பதிப்பித்து வெளியிட உதவிய மாருதி அச்சகத்தாருக்கும் ஆன்மீக அறிஞர்கள் அனைவரின் சார்பாக எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பல்கலைக்கழகப் பொன்விழா ஆண்டில் இப் பணி துவக்கப்பட்டுப் பொன்விழாவிலே முதல் தொகுதி வெளியிடப்பட்டு, பத்துப் பகுதிகளாக, சென்ற பத்தாண்டுகளிலே நிறைவுபெற்றுப் பல்கலைக்கழகத்தின் வைர விழாவிலே திருவருட்பா வரலாற்று முறை உரைப்பதிப்பு முழுமையாக வெளியிடப்பெறுவதிலே நான் மிகுந்த பெருமை கொள்கின்றேன்.
இச் சீரிய ஆன்மீக அறிவுக் களஞ்சியத்தை, தில்லை அம்பலவாணரின் திருவடிகளிலே சமர்ப்பிக்கின்றேன்.
ராம. சேதுநாராயணன்