பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

12

பேசாத ஆனந்த நிட்டைக்கும் அறிவிலாப்
    பேதைக்கும் வெகுதூரமே
  பேய்க்குண மறிந்திந்த நாய்க்குமொரு வழிபெரிய
    பேரின்ப நிட்டை அருள்வாய்
பாசா டவிக்குளே செல்லா தவர்க்கருள்
    பழுத்தொழுகு தேவதருவே
  பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
    பரிபூர ணானந்தமே.
     (பொ - ள்.) வாசா . . . மறந்தபோது - (இறைவன் பொருள் சேர் புகழ் மொழிகளை) வாய் ஓய விடாது மொழியும் உரைத்தொண்டினல்லாது, மனமடங்கும் வண்ணமும், அதற்கு ஏதுவாகிய உயிர்ப்பு (பிராணவாயு) ஒடுங்குமாறும், இடையறாப் பழக்கமாகப் பயின்றறியேன், (பற்றற்றான் பற்றினைப் பற்றுவதாகிய முற்றத்துறக்கும்) துறவு நெறியில் வேட்கையுடையேன் போன்று, பிறர் விழையுமாறு அவர் தம் மனங்குழைய விளங்க இணக்கமுற விரித்துரைப்பேன், (இங்ஙனம் பிறர்க்குரைக்கும் பெருமை நாடும் பெற்றிவாய்ந்த) அந்நினைவையும் மறந்தபோது;

     நித்திரைகொள் . . . வெகுதூரமே - (கெடுநீரார் காமக்கலன்களுள் ஒன்றாகிய) நெடுந்துயில் கொள்வேன்; (மெய்யுணராதாரால் பொன்னே போற் போற்றப்படும் இம் மாயாகாரிய) உடம்பு குறிப்பின்றியும் நீங்கிவிடுமென எண்ணுவேனாயின், (என்று மில்லாத நிலையில்) மனம் துடிதுடித்து நனிமிக வாடுவேன்; (இத்தன்தைத்தென்று யாண்டும் எவராலும்) கூறவொண்ணாத பேரின்பமான (இறைநிறைவில் நீங்காது உறுதியுடன் நிற்றலாகிய) நிட்டைக்கும், நல்லறிவு சிறிதுமில்லாத பேதையேனுக்கும் நெடுந்தொலைவே;

     பேய்க்குண . . . நிட்டையருள்வாய் - (ஆயினும்) வையத்து அலகைக் குணம் படைத்து உன்னருளின்றி உழன்று திரியும் பேதையாகிய அடியேனுடைய பொருந்தா இயல்பினை யறிந்து ஏழைநாயேனுக்கும், ஒப்பற்ற (பெருநெறியும், செந்நெறியுமாகிய சித்தாந்த சைவ நன்னெறியாகிய) என்றும் பொன்றாப் பேரின்ப நிட்டையினைத் தண்ணளிபுரிந்து அருள் செய்வாயாக.

     பாசாடவிக்குளே . . . . . . . . . பரிபூரணானந்தமே - மீண்டும் மீண்டும் பிறவிப் பெருங்கடலினுள் அழுத்தும் பேரவாவாகிய) ஆசை யென்னும் பெருங்காட்டினுள்ளே காலெடுத்து வைத்து நுழையாதவர்கட்கு, திருவைந்தெழுத்தாம் திருவருட்டீங்கனி பழுத்துக் கனிந்து இன்பப் பெருந்தேன் ஒழுகப்பெற்ற அணிகற்பகத் தருவே, நோக்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்து நிற்கின்ற, ஒழியா முழுநிறையாகிய மிக்க பேரின்பமே.

     (வி - ம்.) வாசாகயிங்கரியம் - வாய்த்தொண்டு. வாலாயம் - பழக்கம். அனுசாரி - இணக்கம். அயருவேன் - வாடுவேன், பாசம் - ஆசை. அடவி - காடு. தேவதரு - கற்பகமரம் பரிபூரணம் - முழுநிறைவு.