பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


120


அறம்பாவங் கட்குநாம் என்கடவேம் என்றும்
    ஆண்டவனைக் கண்டக்கால் அகம்புறமென் னாதே
திறம்பாதே பணிசெய்து நிற்கை யன்றோ
    சீரடியார் தம்முடைய செய்தி தானே."
- சிவஞானசித்தியார், 9. 3 - 5.
(6)
சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றினது
    தான்வந்து முற்றுமெனலால்
  சகமீ திருந்தாலும் மரணமுண் டென்பது
    சதாநிட்டர் நினைவதில்லை
சிந்தையறி யார்க்கீது டோதிப்ப தல்லவே
    செப்பினும் வெகுதர்க்கமாம்
  திவ்யகுண மார்க்கண்டர் சுகராதி முனிவோர்கள்
    சித்தாந்த நித்யரலரோ
இந்த்ராதி தேவதைகள் பிரமாதி கடவுளர்
    இருக்காதி வேதமுனிவர்
  எண்ணரிய கணநாதர் நவநாத சித்தர்கள்
    இரவிமதி யாதியோர்கள்
கந்தருவர் கின்னரர்கள் மற்றையர்கள் யாவருங்
    கைகுவித் திடுதெய்வமே
  கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
    கருணா கரக்கடவுளே.
     (பொ - ள்) "சந்ததமும் . . . தர்க்கமாம்"- மறை முறையிட்டு மொழிவது எப்பொழுதும் (மனம் இடையறாது) ஏதாவதொன்றினைப்பற்றின். பற்றப்பட்ட அப்பொருள் தவறாது வந்து கைகூடும் என்பதேயாம். இவ்வுலகில் உடலோடு கூடியிருப்பினும் நீங்கா நிட்டையில் தூங்கும் மேலோர் இறப்பு ஒன்று உண்டென்று எண்ணுவதில்லை; (இவ்வுண்மையினை) உள்ளத்து ஊன்றி உணரும் அறிவில்லாதவர்க்கு உரைப்பதன்று; (ஒரோ வழி) உரைத்தாலும் (அவர்கள் உளங் கொள்ளாது), வீண் வழக்கிட்டுச் சொற்போர் இயற்றுவர்;

    "திவ்யகுண . . . முனிவர்" - (தேவதேவனாகிய சிவபெருமானின்) தெய்வப் பண்பு திருவருளால் மிக்கு வாய்க்கப்பெற்ற மார்க்கண்ட மாமுனிவர், சுகர் முதலாகிய சிவ முனிவோர்கள் (செம்பொருட்டுணிவாம்) சித்தாந்தநெறி கடைப்பிடித்தொழுகிய என்றும் பொன்றாச் செல்வரல்லரோ? (பொது நிலையினராகிய) வானவர்கோன் முதலாகிய