இல்லிலு மன்ப ரிடத்திலு மீச னிருக்குமிடம் | கல்லிலுஞ் செம்பிலு மோவிருப் பானெங்கள் கண்ணுதலே." | - பட்டனத்தடிகள், பொது - 6. |
ஏட்டுச் சுவடி மட்டிலுந்தான் நாட்டுப்பாடமும் வீட்டுப்பாடமும் உள்ளனவல்ல; படித்த நல்லுள்ளத்தும் அழுந்தியவுணர்விலும் திருந்த இருப்பனபோல் இறைவன் கற்படிமத்திலும் செப்புப் படிமத்திலுமன்றி வேறெங்கும் நிறைத்திரான் என்பாரை மறுத்தற்கே 'கல்லிலுஞ் செம்பிலும்' மட்டுமோ இருப்பான் எனக் குறித்தனர். இறைவன் செய்விக்க ஆவிகள் செய்யும் இயல்பின என்பது, கண்கள் வழிகாட்டக் கால்கள் நடப்பனபோன்றாகும்.
| "அவனருளாலே அவன்றாள் வணங்குதல்" |
| (8. சிவபுராணம், வரி - 18.) |
இம்முறைமையை உன்னின் அரைக்கும்பிடு என்பதன் உண்மை புலனாகும். செம்பொருள்தான் செய்விக்கச் சிற்றுயிர்கள் செய்யுமால், தன்வினையேல் பூசையரை சாற்று.
திருக்கோவில் வழிபாட்டில் அருவநிலை அருவுருவநிலை, உருவநிலை என மூவகையுண்டு. அருவநிலை, வெறுவெளியாகிய பொன்னம்பலம். அருவுருவநிலை. சிவக்குறியாகிய பொற்றூண். உருவநிலை கூத்தப் பெருமான் முதலாகச் சொல்லப்படும் ஐயைந்து திருவுருவங்கள்.
| "பொன்னம் பலமருவம் பொற்றூண் அருவுருவம் |
| பின்னுருவம் கூத்தப் பிரான்." |
இம் மூன்று நிலையும் முறையே உணர்வழுந்தல், உள்ளத்துறுதல், கண்ணால் பார்த்துங் காதாற் கேட்டும் பாடங்கொள்ளுதலாகும்.
ஐயைந்துருவம்: 1. பிறைசூடி, 2. உமையோடிருக்கும் பெருங்கடவுள், 3. ஆனேற்றண்ணல் 4. மன்றத்தலைவர், 5. என்றும் மணவாளர், 6. பலிக்கடவுள், 7. காமனை எரித்தோர். 8. காலனையுதைத்தோர், 9. முப்புரமெரித்தோர், 10. சலந்தரற் கொன்றோன், 11. யானையுரித்தோன், 12. வீரப்படையினர், 13. அரியர்த்தர், 14. பெண்ணொருகூறர், 15. வேடத்திருவர், 16. ஏற்புடல் சுமந்தார், 17. சண்டிக்கருளர், 18. திருநீலகண்டர், 19. ஆழிமுதல்வர், 20 யானைமுகனுக்காளர், 21. அம்மைய்ப்பபிள்ளை, 22. ஒற்றைத் தாளர், 23. சுகாசீனர், 24. தென்முகக்கடவுள், 25. குறியெழு கோலத்தர்.
மெய்யுணர்வு வழிபாட்டினர் செய்யும் மேலாம் பூசை வருமாறு:
| "புறம்பேயும் அரன்கழல்கள் பூசிக்க வேண்டிற் |
| பூமரத்தின் கீழ்உதிர்ந்த போதுகளும் கொண்டு |
| சிறந்தாருஞ் சீர்ச்சிவனை ஞானத்தால் அங்குச் |
| சிந்திக்கும் படியிங்குச் சிந்தித்துப் போற்றி |