| "தொழுது தூமலர் தூவித் துதித்துநின் |
| றழுது காமுற் றரற்றுகின் றாரையும் |
| பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும் |
| எழுதுங் கீழ்க்கணக் கின்னம்பர் ஈசனே." - 5. 21 - 8. |
(8)
| பொற்பினொடு கைகாலில் வள்ளுகிர் படைத்தலால் |
| போந்திடை யொடுக்கமுறலால் |
| பொலிவான வெண்ணீறு பூசியே அருள்கொண்டு |
| பூரித்த வெண்ணீர்மையால் |
| எற்பட விளங்குகக னத்திலிமை யாவிழி |
| இசைந்துமேல் நோக்கம் உறலால் |
| இரவுபக லிருளான கன தந்தி பட நூறி |
| தயங் களித்திடுதலால் |
| பற்பல விதங்கொண்ட புலிகலையி னுரியது |
| படைத்துப்ர தாபமுறலால் |
| பனிவெயில்கள் புகுதாமல் நெடியவான் தொடர்நெடிய |
| பருமர வனங்களாரும் |
| வெற்பினிடை யுறைதலால் தவராச சிங்கமென |
| மிக்கோ ருமைப்புகழ்வர்காண் |
| வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற |
| வித்தகச் சித்தர்கணமே. |
(பொ - ள்) 'பொற்பினொடு . . . . . . உறலால்" - அழகோடு கூடிய கைகால்களிலும் (களையப்பெறாமையால்) நீண்டுவளர்ந்து கூர்மையான நகம் உடையதாக இருப்பதாலும், (உணவாகக் காய்கனி கிழங்கு சருகு முதலியவற்றைப் பசி வந்த பொழுது இடையிடையே உண்டுவருதலால்) இடையானது ஒடுங்கிச் சிறுத்து இருத்தலாலும், மிகவும் எழிற்பொலிவு திகழ்கின்ற திருவெண்ணீற்றனை நனிமிகப் பூசி, வெண்ணிறமாகத் திருமேனி விளங்குதலாலும், ஒளியுண்டாகும்படி அறிவுப் பெரு வெளியில் இமை கூடாமல் கண்கள் மேனோக்கி பொருந்திப் பார்த்தலாலும்;
"இரவுபகல் . . . . . . புகழ்வர்காண்" - இரவிலும் பகலிலும் (பேரிருளே பெருவடிவாகக் கொண்ட ஆருயிர்களின் அறிவை மறைத்துக்கொண்டு நிற்கும்) ஆணவமாகிய பெரிய யானை இறந்தொழியும்படி செய்து உள்ளம் இறுமாந்திருத்தலாலும், பற்பல வகையான புலி, மான் முதலியவற்றின் உரியாகிய தோலை இருக்கையாகக் கொண்டு மிக்க புகழ் பெற்றிருப்பதாலும், பனியும் வெயிலும் உட்புகாதபடி மிக நீண்டு வானளாவிப் பெருத்துள்ள பெரிய மரங்கள் நிறைந்துள்ள அழகிய,