பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


146


     "அண்டபகி . . . பரமே" - இவ்வண்டமும் இதற்குப் புறமாயுள்ள பிற அண்டங்களும் உன்னுடைய திருவருட்பெருநிறைவில் சிற்றளவாய் அடங்க எங்கணும் நிறைந்த பேரின்பமான பெரும்பொருளே.

     (வி - ம்) கோரம் - கொடுமை. பட்சபாதம் - ஒருபக்க மாதல். கதி - வீடுபேறு. விர்தா - வீண். கோட்டி - கூட்டம். வாஞ்சை - ஆசை. ஆள் - அடிமை.

    கொல்லாமையின் சிறப்பை வருமாறுணர்க :

"அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
 பிறவினை எல்லாந் தரும்."
- திருக்குறள், 321.
"அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
 உயிர்செகுத் துண்ணாமை நன்று."
- திருக்குறள், 259.
"கொல்லீடு குத்தென்று கூறிய மாக்களை
 வல்லிடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்
 செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
 நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே."
- 10. 240.
(1)
தெருளாகி மருளாகி யுழலுமன மாய்மனஞ்
    சேர்ந்துவளர் சித்தாகிஅச்
  சித்தெலாஞ் சூழ்ந்தசிவ சித்தாய் விசித்ரமாய்த்
    திரமாகி நானாவிதப்
பொருளாகி யப்பொருளை யறிபொறியு மாகிஐம்
    புலனுமாய் ஐம்பூதமாய்ப்
  புறமுமாய் அகமுமாய்த் தூரஞ் சமீபமாய்ப்
    போக்கொடு வரத்துமாகி
இருளாகி யொளியாகி நன்மைதீ மையுமாகி
    இன்றாகி நாளையாகி
  என்றுமாய் ஒன்றுமாய்ப் பலவுமாய் யாவுமாய்
    இவையல்ல வாயநின்னை
அருளாகி நின்றவர்க ளறிவதல் வாலொருவர்
    அறிவதற் கெளிதாகுமோ
  அண்டபகி ரண்டமு மடங்கவொரு நிறைவாகி
    ஆனந்த மானபரமே.