| சீறுபுலி போற்சீறி மூச்சைப் பிடித்துவிழி |
| செக்கச் சிவக்கஅறிவார் |
| திரமென்று தந்தம் மதத்தையே தாமதச் |
| செய்மைகொடும் உளறஅறிவார் |
| ஆறுசம யங்கடொறும் வேறுவே றாகிவிளை |
| யாடுமுனை யாவரறிவார் |
| அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி |
| ஆனந்த மானபரமே. |
(பொ - ள்) "மாறுபடு . . . வித்தையறிவார்" - (நாவன்மையால் நிலைநில்லாது) மாறுபடுதற்குரிய அளவை முறைகளை (பிறரொடு விடாது) தொடர்ந்து உரக்கப் பேச அறிவார்கள்; (எண்சாண் உடம்பினுள்) ஒருசாணளவாகக் காணப்படும் பாழ் வயிற்றினை நிறைத்தற் பொருட்டு (நெருங்கியிருக்கும் இம்) மண்ணுலகத்தையும் (நெடுந் தொலைவிலுள்ளதாகிய) அவ் விண்ணுலகத்தையும் ஒன்றெனவே நினைந்து மனம் ஓவாது சுழலப் பேராசை கொண்டு நிற்க அறிவார்; (பிறரை வஞ்சித்துத் தம்வயப்படுத்துதற்குரிய) பலவேறு வகையான கவர்ச்சிமிக்க கோலங்களைக் கொள்ள அறிவார்; ஒப்பில்லதொரு மந்திரத்தை மெணமெண என்று ஒலித்துக்கொண்டு அதே நேரத்து மனம் அதனொடு பொருந்தாது (பலபல எண்ணங்களை) எண்ணுந் திறத்தினையும் அறிவார்;
எமைப் . . . சிவக்கஅறிவார்" - (அறிவிலா) எங்களைப்போலவே (நாளங்காடியும் அல்லங்காடியுமாகிய) சந்தைக்கடையின்கண் (தம் மூதியமே பெரிதெனக் கருதும் வணிகமாக்கள் போன்று) மெய்ந் நூல்கள் பலவற்றையும் மிகைபடப் பரப்பிப் பிறர் மெச்சுமாறு விரித்து விரித்து விளம்ப அறிவார்; (உள்ளக் கொடுமையால் ஓவாது) சீறும் இயல்பினை நீங்காத புலியினையொத்து மூச்சை வலியப் பிடித்து இழுத்துக்கொண்டு சீறிவிழுந்து விழியிரண்டும் (கொவ்வைப்பழம்போல் மிகுதியும்) சிவக்க அறிவார்;
"திரமென்று . . . யாவரறிவார்" - தத்தம் மதங்களையே உறுதிப் பாடுடையதென (மேலான மெய்ந்நெறிகளை அறிந்துணரும் திருவருட்டுணை கூடாமையான்) அழுந்தற் பண்பாகிய தாமதகுண மேலீட்டால் மனம்போனவாறு உளற அறிவார்; (அவரவர் தகுதிகட்கேற்பப் பள்ளிவகுப்புப் பாடம்போன்று) உலகிடைக் காணப்படும் (நாற்பாலதாகிய) அறுவகைச் சமயங்கள்தோறும் (பள்ளிப்பாடத்தில் யாண்டும் ஊடுருவி நிற்கும் மெய்யறிவுபோன்று) வெறுவேறாய் (அவரவர் கொள்கைகளுக்கேற்பக் கோலங்கொண்டு) வெளிப்பட்டு நின்று விளையாடியருளும் நின் உண்மையினை உணர்வார் யார்?
"அண்டபகி . . . மானபரமே"
(வி - ம்) தர்க்கம் - அளவை. மண்டலம் - மண்தலம். விண்டலம் - விண்தலம். வேடங்கள் - கோலங்கள். மெணமெண : ஒலிக் குறிப்பு.