பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

207
பாகத்தி னாற்கவிதை பாடிப் படிக்கவோ
    பத்திநெறி யில்லைவேத
  பாராய ணப்பனுவல் மூவர்செய் பனுவலது
    பகரவோ இசையுமில்லை
யோகத்தி லேசிறிது முயலவென் றால்தேகம்
    ஒவ்வாதி வூண்வெறுத்தால்
  உயிர்வெறுத் திடலொக்கும் அல்லாது கிரியைகள்
    உபாயத்தி னாற்செய்யவோ
மோகத்தி லேசிறிதும் ஒழியவிலை மெய்ஞ்ஞான
    மோனத்தில் நிற்கஎன்றால்
  முற்றாது பரிபாக சத்திக ளனேகநின்
    மூதறிவி லேஎழுந்த
தாகத்தி லேவாய்க்கும் அமிர்தப் பிரவாகமே
    தன்னந் தனிப்பெருமையே
  சர்வபரி பூரண அகண்டதத் துவமான
    சச்சிதா னந்தசிவமே.
     (பொ - ள்) "பாகத்தி . . . . . . ஒக்கும்" - (பாடுந்தன்மைக்குரிய) முறையினால் செந்தமிழ்ப் பாட்டுக்களைப் பாடிபடிக்க என்றாலோ, (அடியேன்பால்) காதல் கைம்மிகலாகிய பத்திநெறி யில்லை; செந்தமிழ்த் திருமாமறையாகிய திருவாசகம், திருக்கோவையார், மூவர் முதலிகளால் அருளிச் செய்யப்பட்ட தேவாரம் என்னும் அடங்கன் முறை இவற்றை ஓதி உய்யலாமென்றால் இசையொடு பாடப் பண்முறை சிறிதும் இல்லை (அகத்தவம் எனப்படும் செறிவுநிலையாகிய) யோக நெறியிலே சிறிது முயலவென்றாலோ, உடம்பு இடந்தருவதில்லை. (யோக நிலைக்கு வேண்டிய முறையில்) உணவினைக் குறைத்து உண்டு பழகுவோ மென்றாலோ, உயிரை வெறுத்து நீக்குவதோ டொத்திருக்கின்றது.

     "அல்லாது . . . . . . பெருமையே" - அதுவுமல்லாமல் நோன்பெனப்படும் வழிபாட்டுக் கிரியைவகையினால் செய்யவோ நுகர்பொருள் வேட்கை மயக்கத்தில் சிறிதும் பற்று நீங்கவில்லை; மூதறி வெனப்படும் மெய்ஞ்ஞான மோனத்தில் ஒரு மனப்பட்டு நிலைநிற்க வெனிலோ? கைகூடுவதற்கு வழியில்லை, வினைக்கீடாகச் செவ்விவாய்ந்த மாயை ஆற்றல்கள் அளவிறந்தன நின்று தடுக்கின்றன. நின்திருவடியுணர் வெனப்படும் மூதறிவின்கண் மூழ்கி அழுந்தக் கொள்ளும் பெரு வேட்கையில் வாய்த்தருளும் அழியா அமிழ்தப் பெருவெள்ளமே! தனக்குத்தானே ஒப்பாகிய தன்னந்தனிப் பெரும் பொருளே!