"முடிவிலே . . . நிற்பதென்றோ" - (நன்றாக எண்ணிப் பார்க்கின்) முடிவிலே நிலைப்பதாகிய மெய்போலிருந்து நிலையில்லாததாகிய பொய்போலொழியும் இவ்வுடம்பைப் பொய்யென்று மூதறிவுப் பிழம்பே அழியாமெய்யென்று அம் மெய்யுள்ளடங்கி அதுவே தானாகி நீங்காது ஒரு நிலையாக நின்று இன்புறுவது எந்தநாளோ? (சர்வபரி பூரண . . . சிவமே-என்பதற்கு முதற் பாட்டிற் கூறிய உரையினையே வரும் எல்லாப்பாட்டிற்கும் அமைத்துக்கொள்க.)
"சர்வபரி . . . சிவமே" -
(வி - ம்.) குடக்கு - மேற்கு. குணக்கு - கிழக்கு. திக்கு-திசை. உழக்கு - நாழியின் நாலிலொன்று. சுருங்கில் - சிறுவீடு; குடில். சாலேகம் - பலகணி. குலாவு - விளங்குகின்ற. நடைமனை - நடமாடித் திரியும் உடம்பு. நாறும் - தோன்றுகின்ற. தசை-இறைச்சி. விடக்கு - இறைச்சி. துருத்தி - தோற்பை. சடக்கு - உடம்பு. சடக்கென்று - பொய்யென்று. சதம் - மெய்; நிலைப்பு. சின்மயம் - மூதறிவுவண்ணம்; சிவஞானம். சுருங்கு + இல் = சுருங்கில்.
பலகணி ஒன்பது என்று குறிக்கப்பட்டிருப்பினும் ஏழென்பதே கருத்து. ஏனைய இரண்டும் வாயில்கள் எனப்படும். வாயும் எருவாயும் இருவாயென்ப. கண்ணிரண்டு; காதிரண்டு, மூக்குத்தொளை இரண்டு, கருவாய் ஒன்று ஆக ஏழும் பலகணியென்ப.
இவ்வுண்மை வருமாறுணர்க :
| "என்பினாற் கழிநிரைத் திறைச்சிமண் சுவரெறிந் திதுநம்மில்லம் |
| புன்புலா னாறுதோல் போர்த்துப்பொல்லாமையான் முகடுகொண்டு |
| முன்பெலா மொன்பது வாய்த1லார் குரம்பையின் மூழ்கிடாதே |
| அன்பனா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்சனெஞ்சே". |
| 2. 79 - 8. |
உடம்பினைச் சுடுகாடென்றது உண்டவூண் அற்றுப் போதலானென்க. அற்றுப் போதல் - செரித்தல். இனிப் புலாலுண்பார்க்கு உண்மையே சுடுகாடாம். அது வருமாறு :
| "துக்கத்துள் தூங்கித் துறவின்கட் சேர்கலா |
| மக்கட் பிணத்த சுடுகாடு-தொக்க |
| விலங்கிற்கும் புள்ளிற்கும்காடே புலங்கெட்ட |
| புல்லறி வாளர் வயிறு." |
| - நாலடியார், 121. |
(2)
1. | 'கால்கொடுத்' 4. 67 - 3. |