பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

205
"செய்தற் கரிய செயல்பலவுஞ் செய்துசிலர்
 எய்தற் கரியதனை எய்தினர்கள்-ஐயோநாம்
 செய்யாமை செய்து செயலறுக்க லாயிருக்கச்
 செய்யாமை செய்யாத வாறு."
- திருக்களிற்றுப்படியார், 61.
(1)
 
குடக்கொடு குணக்காதி திக்கினை யுழக்கூடு
    கொள்ளல்போல் ஐந்துபூதங்
  கூடுஞ் சுருங்கிலைச் சாலேகம் ஒன்பது
    குலாவுநடை மனையைநாறும்
வடக்கயிறு வெள்நரம் பாஎன்பு தசையினால்
    மதவேள் விழாநடத்த
  வைக்கின்ற கைத்தேரை வெண்ணீர்செந் நீர்கணீர்
    மலநீர்புண் நீரிறைக்கும்
விடக்குத் துருத்தியைக் கருமருந்துக் கூட்டை
    வெட்டவெட் டத்தளிர்க்கும்
  வேட்கைமரம் உறுகின்ற சுடுகாட்டை முடிவிலே
    மெய்போ லிருந்துபொய்யாஞ்
சடக்கைச் சடக்கெனச் சதமென்று சின்மயந்
    தானாகி நிற்பதென்றோ
  சர்வபரி பூரண அகண்டதத் துவமான
    சச்சிதா னந்தசிவமே.
     (பொ - ள்) "குடக்கொடு . . . . . . வைக்கின்று" - மேற்கோடு கிழக்குமுதலாகச் சொல்லப்படுகின்ற திசைகளை (முகத்தலளவைக் கருவியாகிய) உழக்கினூடு கொள்ளுந்தன்மைபோல் பருப்பொருள்களாகிய ஐந்து பூதங்கள் ஒன்று கூடும் சிறுகுடிலாகிய உடம்பை, பலகணிகள் ஒன்பதுடன் கூடிவிளங்குகின்ற நடமாடும் வீட்டை, காணப்படுகின்ற வடக்கயிறு வெள்ளிய நரம்பாகவும், எலும்பு இறைச்சிகளால் காமன் திருவிழா நடத்தி வைக்கின்ற;

     "கைத்தேரை . . . . . . சுடுகாட்டை" - சிறுதேரை, கோழையாகிய வெண்ணீரும், குருதியாகிய செந்நீரும், கண்களிலிருந்து வடியும் கண்ணீரும், ஒன்றுக்குப் போதலாகிய சிறுநீரும், இறைச்சியிலிருந்து சொட்டும் புண்ணீரும் ஆகிய இவற்றை விடாது இறைக்கும் இறைச்சித்துருத்தியை, பிறப்புக்கு முதலாகிய கருமருந்து தங்கியுள்ள கூட்டை, வெட்டுந்தோறும் வெட்டுந்தோறும் பட்டு விடாது தளிர்த்துக் கொண்டிருக்கும் வேணவாவாய (நச்சு) மரங்கள் பெருகியிருக்கின்ற சுடுகாட்டை.