போல் அலைக்கும் குரங்குமனத்தினைச் சார்ந்து தாயற்ற சேய்போன்று உய்வதறியாது பித்தாகவோ? அத்தகைய மனத்தினைச் சாராமல் உணர்வினில் உறைத்து நிற்கும் (பேருணர்வையன்றி வேறொன்றும் தோன்றா நிலையாம்) நிருவிகற்ப உறுப்பினையுடைய (அழிவில்லாத உணர்வுடன் உறுதியாக ஒட்டி நிற்பதாகிய) சாசுவத நிட்டையினை (அடியேனுக்கு) அருள்புரிவாயாக. (எல்லா உயிர்களினும், எல்லா உடைமைகளினும்) எங்கும் நிறைவாய் எல்லையில்லதாய் மெய்ப்பொருளாயுள்ள உண்மை அறிவு இன்பப் பிழம்பாகிய ஒப்பிலா நல்லசிவமே;
"சர்வபரி . . . சிவமே" -
(வி - ம்.) பார் - நிலம். ககனம் - வெளி. பரப்பு - வியாபகம். படர் - வியாபகமான. எழுநா - தீ; ஏழு நாக்களையுடையது. பரிதி - ஞாயிறு, மதி - திங்கள். சுயஞ்சோதி - இயல்புப்பேரொளி. சும்மா - புறச்செயல் ஏதும்இன்றி (விருப்பு வெறுப்பு அற்று). நிருவிகற்பம் - புறப்பொருள் வேறுபாட்டுத் தோற்றம் இன்மை. அங்கம் - உறுப்பு. சாசுவதம் - அழியாமை; நித்தியம்; எப்பொழுதும். நிஷ்டை - உணர்வோடுணர்வு உறைத்து ஒன்றித்து நிற்றல். சர்வம் - எல்லாம். பரிபூரணம் - ஒழிவில் நிறைவு. அகண்டம் - பிரிப்பில்லாத. தத்துவம் - மெய்ப்பொருள். சத்து -உண்மை. சித்து-அறிவு. ஆனந்தம் - இன்பம். சிவம் - நல்லசிவம்; பரமசிவம்.
'சும்மா' விருத்தலென்பது ஏடு தொடங்குங்கால் நல்லாசான் பிள்ளையின் கையைப் பிடித்து எழுதுவிக்குங்கால் அப் பிள்ளை செயல் செய்யாமலும் இல்லை. முன் நினைந்து செய்வதுமில்லை; இன்னது செய்தோமென்று தானாகத் தனித்தெண்ணுவதுமில்லை. ஆசான் உடனாய் நின்று செய்விப்ப, எண்ணுவிப்ப, பிள்ளை எண்ணுவதும் செய்வதும் செய்யும். இதுவே சும்மாவிருத்தலென்பதாகும். இவ்வுண்மை சிவபெருமான், சண்டேசுர நாயனார்பால் எண்ணுவிக்க எண்ணலும், செய்விக்கச் செய்தலும், நிகழ்ந்தமையான் உணரலாம்.
| "சிந்தும் பொழுதி லதுநோக்குஞ் சிறுவர் இறையிற் றீயோனைத் |
| தந்தை யெனவே யறிந்தவன்றன் றாள்கள் சிந்தும் தகுதியினால் |
| மூந்தை மருங்கு கிடந்தகோ லெடுத்தார்க் கதுவே முறைமையினால் |
| வந்து மழுவா யிடவெறிந்தார் மண்மேல் வீழ்ந்தான் மறையோனும்." |
| - 12. சண்டேசுரர், 51. |
சட்டத்தின் வழியாகச் செயல்புரியும் நடுவன் செயல் சட்டத்தின் செயலேயன்றி அவன் செயலாகாமைபோன்று சண்டேசுர நாயனார் செயலும், அவர் செயலாகாது சிவனருட்செயலேயாம். வருமாறு நினைவு கூர்க :
| குற்றங் குறித்தறத்தால் கொல்லும் நடுவன்போல் |
| உற்றெறிந்தார் தந்தைதா னோர்ந்து. |