பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

203
 
பாராதி ககனப் பரப்புமுண் டோவென்று
    படர்வெளிய தாகிஎழுநாப்
  பரிதிமதி காணாச் சுயஞ்சோதி யாய்அண்ட
    பகிரண்ட உயிரெவைக்கும்
நேராக அறிவாய் அகண்டமாய் ஏகமாய்
    நித்தமாய் நிர்த்தொந்தமாய்
  நிர்க்குண விலாசமாய் வாக்குமனம் அணுகாத
    நிர்மலா னந்தமயமாய்ப்
பேராது நிற்றிநீ சும்மா இருந்துதான்
    பேரின்ப மெய்திடாமல்
  பேய்மனதை யண்டியே தாயிலாப் பிள்ளைபோல்
    பித்தாக வோமனதைநான்
சாராத படியறிவின் நிருவிகற் பாங்கமாஞ்
    சாசுவத நிட்டைஅருளாய்
  சர்வபரி பூரண அகண்டதத் துவமான
    சச்சிதா னந்தசிவமே.
     "பாராதி . . . அறிவாய்" - நிலமுதல் வானம் முடிவாகச் சொல்லப்பட்ட ஐம்பெரும் பூதங்களும் (பகல் விளக்குப்போன்று) உண்டோ என்று எண்ணும்படியாக அறிவுப்பெருவெளியாய் எங்கும் பரந்து, (ஒளிதரும் பொருளாகக் காணப்படும்) தீயும், ஞாயிறும், திங்களும் காணமுடியாதபடி அவற்றுக்கு ஒளியினைக் கொடுத்துக்கொண்டுதான் இயற்கைப் பேரொளியாய், அண்டத்திலும் புற அண்டங்களிலும் உறைகின்ற அனைத்துயிர்கட்கும் (அறிவுக்கு அறிவாய் நின்று விளக்கும் இயல்பினில்) செம்மையான அறிவுருவாய்;

     "அகண்டமாய் . . . நிற்றி நீ" - வரையறுக்கப்படாததாய், (தன்னையன்றி வேறொரு கடவுள் யாண்டும் இன்மையால்) ஒன்றேயாய், (என்றும் எதனாலும் பொன்றுதலில்லாத இயல்பினால்) அழிவில்லாததாய், (கலப்பினால் எங்கும் பிரிப்பின்றி நிறைந்திருப்பினும் எவ்வகைத்) தொடர்பும் இல்லாததாய், (மாயாகாரிய, மெய்கள் வாயிலாக வரும் அமைதி ஆட்சி அழுந்தல் என்னும்) மூன்று குணங்களும் இல்லதாயுள்ள திருவிளையாடல்களையுடையதாய், மாற்றம் மனம் கடந்த, மலமில்லாத பேரின்பப் பிழம்பாய் எங்கணும் ஒழிவறப் பிரிவின்றி நீ அசையாது உடனாய் நிலைநின்றருளுகின்றாய்;

     "சும்மா . . . சிவமே" - அடியேன் (தனக்கொப்பில்லாத நின் திருவடியை உணர்வின்கண் இடையறாது உள்கி) புறச்செயலறலாகிய சும்மா இருந்து, திருவடிப் பேரின்பப் பெருவாழ்வு நுகராமல் பேய்