பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

211
"புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை யென்றெண்ணி
 இன்னினியே செய்க அறவினை-இன்னினியே
 நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேளலறச்
 சென்றான் எனப்படுத லால்."
- நாலடியார், 29.
     "மோனநிலை" எய்தக் கண்மூடி மௌனியாய் இருத்தல் இன்றியமையாததென்பதனை வருமாறுணர்க:

"தண்டி யடிகள் திருவாரூர்ப் பிறக்கும் பெருமைத் தவமுடையார்
 அண்ட வாணர் மறைபாட ஆடுஞ் செம்பொற் கழல்மனத்துக்
 கொண்ட கருத்தின் அகநோக்குங் குறிப்பே அன்றிப் புறநோக்குங்
 கண்ட உணர்வு துறந்தார்போல் பிறந்த பொழுதே கண்காணார்."
- 12. தண்டியடிகள், 1.
(5)
 
மத்தமத கரிமுகிற் குலமென்ன நின்றிலகு
    வாயிலுடன் மதிஅகடுதோய்
  மாடகூ டச்சிகா மொய்த்தசந் திரகாந்த
    மணிமேடை யுச்சிமீது
முத்தமிழ் முழக்கமுடன் முத்தநகை யார்களொடு
    முத்துமுத் தாய்க்குலாவி
  மோகத் திருந்துமென யோகத்தின் நிலைநின்று
    மூச்சைப் பிடித்தடைத்துக்
கைத்தல நகப்படை விரித்தபுலி சிங்கமொடு
    கரடிநுழை நூழைகொண்ட
  கானமலை யுச்சியிற் குகையூ டிருந்துமென்
    காதலா மலகமென்னச்
சத்தமற மோனநிலை பெற்றவர்க ளுய்வர்காண்
    சனகாதி துணிவிதன்றோ
  சர்வபரி பூரணி அகண்டதத் துவமான
    சச்சிதா னந்தசிவமே.
     (பொ - ள்) "மத்தமத . . . இருந்துமென்" - வெறிகொண்ட மதம் பொழிகின்ற யானைக்கூட்டங்கள் மேகக்கூட்டங்கள் என்று சொல்லும்படி மிகுதியாக முற்றத்தில் நின்று விளங்கவும், மாளிகைகள் திங்கள் மண்டிலத்தின் நடுவிடத்தைத் தோயும்படி மாடகூடச் சிகரங்கள் ஓங்கி உறுதியாய் நிற்கவும் உள்ள வளமனைகளின் திங்கட்கதிர்கள் காலுகின்ற மணிகள் அழுத்திய சந்திரகாந்தக்கல் பதித்துள்ள நிலா முற்றத்துள்ள மேடையின் உச்சிமீது இயல், இசை, நாடகம் என்னும் மூன்றினையும் விளக்கும் முத்தமிழின் முழக்கம் பெருகவும், சிறந்த முத்துக்களையும்