பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

257
கோலமிலை புலனில்லை கரணம் இல்லை
    குணமில்லை குறியில்லை குலமும் இல்லை
பாலருடன் உன்மத்தர் பிசாசர்குணம் மருவிப்
    பாடலினொ டாடலிவை பயின்றிடினும் பயில்வர்."
- சிவஞானசித்தியார், 8. 2 - 22.
(1)
 
பன்மு கச்சமய நெறிப டைத்தவரும்
    யாங்க ளேகடவு ளென்றிடும்
  பாத கத்தவரும் வாத தர்க்கமிடு
    படிற ருந்தலை வணங்கிடத்
தன்மு கத்திலுயிர் வரவ ழைக்கும்எம
    தரும னும்பகடு மேய்க்கியாய்த்
  தனியி ருப்பவட நீழ லூடுவளர்
    சனக னாதிமுனி வோர்கள்தஞ்
சொன்ம யக்கமது தீர அங்கைகொடு
    மோன ஞானம துணர்த்தியே
  சுத்த நித்தஅரு ளியல்ப தாகவுள
    சோம சேகரகிர் பாளுவாய்த்
தென்மு கத்தின்முக மாயி ருந்தகொலு
    எம்மு கத்தினும் வணங்குவேன்
  தெரிவ தற்கரிய பிரம மேஅமல
    சிற்சு கோதய விலாசமே.
     (பொ - ள்) "பன்முகச்சமய . . . . . . வணங்கிட" - பலவகையான கொள்கைகளையுடைய சமயவழிகளைப் படைத்தவர்களும், (அதுவுமல்லாமல்) தங்கள் சமயமாவது தாங்களே கடவுளரென்று கூசாது சொல்லித் தருக்கித் திரியும் கொடிய பாவிகளும், (உண்மை காணும் நோக்கமின்றி) வீண் வழக்காடும் சழக்குரை வஞ்சகரும், (திருவருள் நாட்டமுண்மையால் மெய்யுணர்வு கைவந்த நற்றவத்தோர் முன் அந்நாட்டப் பேறு பெறாத தங்கள் முன்னிலைமையினுக்குக் கழிவிரக் கங்கொண்டு) தலை வணங்கும் பொருட்டு;

     "தன்முகத் . . . உணர்த்தியே" - (பிறந்து பிறந்து, இறந்து இறந்து மீண்டும் பிறக்கும் பெற்றயுடைய வினைப்பாச நீங்கா) ஆருயிர்களை இறைவன் திருவாணை வழி நின்று தன்பால் வரவழைத்துக்கொள்ளும் கூற்றுவனும் தன்றொழில் நடவாமையால் எருமையினை மேய்க்குந் தொழிலுடையவனாய்த் தனித்து வாளாவிருப்ப (திருவெள்ளி மலைக்கண் கல்விக்குரிய இடமாகக் கருதப்படும்) பெரிய கல்லால மரத்தின் நீழலில் வளரும் மதி வாய்ந்த முனிவர்களாகிய சனகன், சனந்தனன், சனாதனன், சனற்குமாரன் எனப்படும் நால்வர்களுக்கும்