| "நானவனென் றெண்ணினர்க்கு நாடுமுளம் உண்டாதல் |
| தானெனவொன் றின்றியே தானதுவாய் - நானெனவொன் |
| றில்லென்று தானே யெனுமவரைத் தன்னடிவைத் |
| தில்லென்று தானாம் இறை." |
| - சிவஞானபோதம், 10 - 1 - 1 |
(7)
இன்றென இருப்பே மென்னின் என்றுஞ்சூ னியமா முத்தி | நன்றொடு தீது மன்றி நாமுன்னே பெறும்அ வித்தை | நின்றது பெத்தந் தானே நிரந்தர முத்தி யென்னின் | ஒன்றொரு வரைநான் கேட்க உணர்வில்லை குருவு மில்லை. |
(பொ - ள்) "இன்றென . . . நின்றது" - (இவ்வுடலையும் இவ்வுலகத்தையும் அல்லாமல்) வேறே வீடுபேறு என்பதொன்றில்லை யெனக் கூறினாலும், அங்ஙனமே இருப்போமென உறுதிகொண்டாலும் பேரின்பம் நுகரும் பெரும்பேறென்பது சிறிதும் இன்றாய்ப் பாழாய் ஒழியும். ஒழியவே, (நன்மை செய்து பிறப்பு நீங்கிச் சிறப்புற வேண்டுமென்னும் பெருநோக்கமுண்டாகாது. உண்டாகாதாகவே, குற்றத்தினின்றும் நீங்குதல் வேண்டுமென்னும் கொள்கையும் ஏற்படப் போவதில்லை.) எனவே நன்று தீதென்னும் நயப்பாடுமின்றாய் நம்மைப் பண்டே புல்லிய மலப்பிணிப்பாகிய அறியாமையே நிலைநின்றதாகும்.
"பெத்தந்தானே . . . இல்லை" - பிறப்பிய லெனப்படும் இவ்வுடலோடு கூடி உழலும் இவ்வுலகவாழ்க்கையே நிலையான வீடுபேறு என்னின் யான் ஒருவரை அடுத்து ஒன்றும் வினவித்தெரிந்து கொள்ள வேண்டுவதில்லை ஒரு குருவினை அடுக்கவேண்டு மென்றோ? குருவுண்டென்றோ? கூறுவதற்கில்லை.
(8)
இல்லையென் றிடினிப்பூமி இருந்தவா றிருப்போ மென்னில் | நல்லவன் சாரு வாகன் நான்சொலும் நெறிக்கு வீணில் | தொல்லையேன் ஆக மாதி தொடுப்பதேன் மயக்க மேதிங் | கொல்லைவந் திருமி னென்ன வுறவுசெய் திடுவ னந்தோ. |
(பொ - ள்) "இல்லையென் . . . என்னில்" - (அறிவும், அறிவிக்கும் குருவும்) இல்லையென்று சொல்லில் (பின்) இவ்வுலகம் இருந்தபடியே இருப்போமென்று கூறுவோ மென்றால்.
"நல்லவன் . . . அந்தோ" - (உனக்குக் குளிர்ந்து கொல்லும் பகையாகிய) சாருவாகன் நல்லவன் போன்று உறவாய் வந்து (அன்பனே !) நான் சொல்லும் இன்பநெறிக்கு, வீணாகத் தொல்லை கொள்ள வேண்டுவது ஏதுமில்லை; ஆகமமுதலாகச் சொல்லப்படும் பொய்ந்நூல்களின் நின்று காலக்கழிவாகிய வீண்சொற்போர்கள் எதற்கு? பொருந்தா மயக்கங்கள் ஏன்? வல்விரைவாக என்னுடன் வந்து உறவுகொள்க என்று வந்து கூடுவன்.