பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

303
எண்ணார் சிறைக்கோட்டக் காவலர் குற்றம் புரியின் சிறைத்தண்டனை எய்தாரோ? எய்துவரன்றே; அதுபோல் மாலும் அயனும் மேலும் மேலும் குற்றம் பல புரிந்து தண்டனை பெற்றமையைப் பழங்கதைகளான் உணரலாம். அவர்தம் பிறப்புகளும் அளவில்லன என்பதும் அங்ஙனமே அறியலாம். இவ்வுண்மைகள் வருமாறு :

"ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று
 சாவா திருந்தானென் றுந்தீபற
 சதுர்முகன் தாதையென் றுந்தீபற."
- 8. திருவுந்தியார் 6
"நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
 ஆறு கோடி நாராயண ரங்ஙனே
 ஏற கங்கை மணலெண்ணி லிந்திரர்
 ஈறி லாதவன் ஈசன் ஒருவனே."
- 5. 100 - 3.
(6)
 
நானென நிற்கு ஞானம் ஞானமன் றந்த ஞானம்
மோனமா யிருக்க வொட்டா மோனமின் றாக வேதான்
தேனென ருசிக்கும் அன்பாற் சிந்தைநைந் துருகும் வண்ணம்
வானென நிறைந்தா னந்த மாகடல் வளைவ தின்றே.
     (பொ - ள்) "நானென . . . ஒட்டா" - நானெனமுனைத்து நிற்கும் அறிவு உண்மை யறிவன்றாகும்; அந்த அறிவு, பேசாப்பெரு நிலையினைத் தரமாட்டாது.

     "மோனமின் . . . வளைவதின்றே" - மோனமாகிய பேசாநிலை பிறவா விட்டால், தேன்போன்று மிக்க சுவையுடையதாய் இனித்து உள்ளம் நைந்து உருகும் வண்ணம் பேரின்பப் பெருங்கடலானது வான் போல் நிறைந்து ஆருயிர்களைத் தன்னுள் அடக்கிக் கொள்வதில்லை.

     (வி - ம்.) நானென முனைக்கும் எண்ணம் நண்ணுவது திருவடிப் பேறு கைகூடாநிலையி லென்க. காதலரிருவரும் மணமுடிப்பதன் முன் நான் அவன் எனவோ, நான் அவள் எனவோ எண்ணுவதற்கிட முண்டு. காதலால் கருத்தொருமித்துக் கூடியபின் அங்ஙனம் எண்ணம் தோன்றுவதற்கு இடமுண்டாமோ? ஆகாதன்றே? வேலைகிடைக்குமுன் வேலை தேடும் எண்ணம் உண்டாகும். வேலை கிடைத்தபின் அவ் வெண்ணம் உண்டாகுமோ? உண்டாகாதன்றே? ஆனால், வேலை செய்து கொண்டிருக்கு மியல்பேயுண்டாகும். காதலருள் வேறுபாடின்மையும் இன்பநுகர்வுமே உண்டாகும். இவைபோன்றெண்ணுக. இவ்வுண்மை வருமாறு :

"அதுவே,
 தானே அவளே தமியர் காணக்
 காமப் புணர்ச்சி இருவயின் ஒத்தல்."
- இறையனார் அகப்பொருள். 2.