பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

302
திருவடிப்பேறெய்திய இடத்து ஆண்டும் சிவனை மறவாமையாகிய அறிவும், பத்தி மீதூர்தலாகிய அன்பும், பற்றுதலாகிய ஆற்றலும் என்னும் முத்திறவொழுக்கமும் முறைமுறை நிகழும் என்னும் வாய்மையினை வகுத்துணர்த்துவது, வீசிய திருக்கையாகும். சிவதத்துவம் செவிப்புலனாம் ஓசைக்குத் துணை நிற்கும்; சத்திதத்துவம் கட்புலனாம் எழுத்திற்குத் துணைநிற்கும். காதுணரும் ஓசைசிவம் கட்புலனுக்கா மெழுத்திங், கோதுசிவை நாதவிந்தாம் என்று ஓர்ந்துரைப்பர்.

     நாதப்பறையினுண்மை வருமாறு :

"இன்பான் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன்
 முன்பான் முழங்கும் முரசியம் பாய் - அன்பாற்
 பிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும்
 பருமிக்க நாதப் பறை."
- 8. திருத்தசாங்கம், 8.
(5)
 
அல்லலாந் தொழில்ப டைத்தே அடிக்கடி உருவெ டுத்தே
மல்லல்மா ஞாலங் காக்க வருபவர் கடவு ளென்னில்
தொல்லையாம் பிறவி வேலை தொலைந்திடா திருள்நீங் காது
நல்லது மாயை தானும் நானென வந்து நிற்கும்.
     (பொ - ள்) "அல்லலாந் . . . என்னில்" - (மாயாகாரிய உலகு உடம்புகளைத் தோற்றுவித்துக் காத்துவருதல் மலத்தைக் துடைப்பதுடன் அவற்றையும் துடைத் தகற்றுவதற்கேயாம். எனவே அவையும் துன்பந் தருவனவாம். அத்தகைய துன்பவடிவாகிய தொழிலினைப் பெற்று அடுத்தடுத்துப் பிறந்து இறந்து உருவெடுத்துத் துன்பவடிவாகிய வளப்ப மிக்க இவ்வுலகத்தினைப் படைக்கவும் காக்கவும் வரும் முக்குணவயப்பட்ட அயனும் அரியும் கடவுளர் என்று சொன்னால்.

     "தொல்லையாம் . . . நிற்கும்" - (தம்மைப்போல் பிறந்து இறந்து உழன்றுவரும் முக்குணவயப்பட்ட உயிரினங்களாகிய அயனையும் அரியையும் மலக்கொடுமையால் மாயைமயக்கத்தால் கடவுளர் என்று கூறித்திரிவரேல் அத்தன்மையார்க்கு) தொன்று தொட்டு விடாது பற்றிவரும் பிறவிப்பெருங் கடல் தொலைந்தொழியாது. பண்டேபுல்லிய மலவிருளும் நீங்காது; (அறிவை விளக்கவந்த மாயையும் அறியாமைப் பிணிப்பினால் சிறிதே விளக்கிப் பெரிதும் மயக்குகின்றது. அதனால்,) மாயையும் நல்லதுபோலத் தோன்றி நான் என முனைத்தே வந்து நிற்கும்.

     (வி - ம்.) மாயாகாரிய உடம்பில் ஆருயிர் சேர்வது குற்றந் தீரச் சிறைக்கோட்டம் நண்ணுவதும், நோய் நீங்க மருத்துவமனை புகுவதும், அறியாமை தீரக் கல்விக்கழகம் சேர்வதும், வறுமை யொழியத் தொழிலகம் நுழைவதும் போன்ற வொன்றாகும்.

     சிறைக்கோட்டக் காவலரை எவரேனும் தெய்வம் என எண்ணுவரா? அல்லது ஆட்சித் தலைவரென எண்ணுவரா? எண்ணாரன்றே? அதுபோல் அயனையும் அரியையும் உண்மையுணர்ந்தோர் தெய்வமென