வந்தது. சிவபெருமான் அச் செருக்கினை அடக்கித் தன் திருச்சடையில் தாங்கிக் கொண்டனன். இதுவே கங்கையினைத் திருச்சடையிற் றாங்குதலாம்.
அக் கங்கையினை நான்முகன் தவமிருந்து சிவபெருமான்பாற் பெற்றுத் தன்நகராகிய மனோவதிக்குக் கொண்டு போயினன். அக் கங்கை பகீரதன் தவத்துக் கீடாக மீட்டும் பெருவெள்ளத்துடன் பெருகிவர, அப் பெருக்கால் உலகம் அழிந்துவிடும்போல் இருந்தது. அதுகண்டு சிவபெருமான் அப்பொழுதும் திருச்சடையின்கண் தாங்கியருளினன். அது சிறிதளவே நிலத்தே வந்து பயன் தந்தது. இவையே கங்கையின் வரலாறாகும். முதல்வனது உலகப் பெருவடிவில் காற்று மூச்சாகும்; உருவம் வானமாகும். நிலம் தாளாகும்; உள்ளம் மன்றாகும். மன்று - திருச்சிற்றம்பலம்.
(4)
மறைமுழக் கொலிப்பத் தானே வரதமோ டபயக் கைகள் | முறைமையின் ஓங்க நாதம் முரசெனக் கறங்க எங்கும் | குறைவிலா வணநி றைந்து கோதிலா நடனஞ் செய்வான் | இறையவன் எனலாம் யார்க்கும்இதயசம் மதமீ தல்லால். |
(பொ - ள்) "மறைமுழக் . . . கறங்க" - (அறம் பொருள் இன்பம் வீடாகிய நான்கினையும் ஆலமர்செல்வனாய் வீற்றிருந்து அந்நால்வருக்கும் அருளிச் செய்த) பண்டைத் தமிழ்மறைகள் பண்ணொடுமுழங்கி ஒலிக்கவும், தானாகவே (ஆருயிர்களின் அச்சத்தைப் போக்கும் திருக் குறிப்பாக அமைந்துள்ள) வலப்பால் அஞ்சற்க எனும் கையும் (தூக்கிய திருவடியினைச் சுட்டிக்காட்டி அத் திருவடிப் பேரின்பினை நுகருமாறு வரமருளும்) இடப்பாலாம் வீசியதிருக்கையும் முறைமையருளி ஓங்கவும், (தூயமாயையின்கண் காணப்படும் மெய்கள் ஐந்தனுள் முதன் மெய்யாகக் காணப்படும்) சிவ மெய்யாகிய நாததத்துவம் முரசென முழங்கா நிற்கவும்.
"எங்கும் . . . அல்லால்" - எல்லா இடங்களிலும் குறைவிலா வண்ணம் நிறைந்து (ஆருயிர்களின் மலக்குற்றங்களை யகற்றும் பேரருள்வாய்ந்த) குற்றமில்லாத ஐந்தொழிற் பெருங்கூத்தினை இடையறாது புரிந்தருளும் பெருமான் யாவன்? அவனே தேவர் மூவர் உள்ளிட்ட ஆருயிர்கள் அனைத்திற்கும் பதி எனப்படும் இறைவனாவன் என்னும் உண்மையினை எடுத்து மொழிதலாகும். இவ் வாய்மைமொழி உண்மை நாட்ட முடையார் அனைவருக்கும் உள்ளம் பொருந்திய மாறில்லாத ஒப்புதலாகும். ஈதல்லாமல்; (வேறெதுவும் வாய்மையாகாது.)
(வி - ம்.) வரதம் - வரமருளும் திருக்கை. இஃது இடப்பாற்றிருக்கை யாகும். அபயம் - அஞ்சாதே என்று உரமருளும் திருக்கையாகும். இது வலப்பாற்றிருக்கையாகும். கால் என்பது வழியினையும் கையென்பது ஒழுக்கத்தினையும் குறிப்பனவாகும். ஆருயிர்கள் திருவருளால் நன்னெறியின் வழியொழுகிப் பத்தி மிகுந்து