பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

306
 
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
பன்மாலைத் திரளிருக்கத் தமையு ணர்ந்தோர்
    பாமாலைக் கேநீதான் பட்ச மென்று
நன்மாலை யாவெடுத்துச் சொன்னார் நல்லோர்
    நலமறிந்து கல்லாத நானுஞ் சொன்னேன்
சொன்மாலை மாலையாக் கண்ணீர் சோரத்
    தொண்டனேன் எந்நாளும் துதித்து நிற்பேன்
என்மாலை யறிந்திங்கே வாவா என்றே
    எனைக்கலப்பாய் திருக்கருணை எம்பி ரானே.
     (பொ - ள்) "பன்மாலைத் . . . நல்லோர்" (தம்மை விழுமிய முழு முதல்வனுக்கு அடிமையென்று திருவருளால் உணர்ந்து இறைபணி நிற்போர்) தம்மை யுணர்ந்தோராகிய மெய்யடியார் பாடும் செந்தமிழ்ப் பாமாலைக்குப் பொன்னாலும் மணியாலும் நறுமணப்பூக்களாலும் ஆகிய பலமாலைகள் உடைத்தாயிருக்கவும், நீ நனிமிக விருப்பங்கொண்டருள்கின்றனை யென்று செம்பொருட்டுணிவினராகிய நல்லோர் அப் பாமாலையினையே மிக்கெடுத்து ஓதி வழிபடுவாராயினர்.

     "நலமறிந்து . . . எம்பிரானே" - இந்நலப்பாட்டினையறிந்து கல்வியறிவு சிறிதுமில்லாத அடியேனும் சொன்மாலையாகச் சொன்னேன். தொடர்பாகச் சொன்மாலைமாலையாகக் கண்ணீர் பெருகி வடியவும் உன்திருவடித்தொண்டனேனாகிய எளியேன் எஞ்ஞான்றும் உன்னைப் பாடிப்பணிந்து நிற்பேன். அடியேனுடைய குறைவுசேர் பாமாலையையும் திருவுள்ளங் கொண்டு அடியேனை முத்திறத்தாம் மெய்ப்புணர்ப்புப் புணரத் திருவாய் மலர்ந்து, வருக வருக என எளியேனை அழைத்து என்னுடன் கலப்புப்புரிந்தருள எம்பிரானே! திருவருள் புரிந்தருள்வாயாக.

     (வி - ம்.) முத்திறப்புணர்ப்பு: கலப்பினால் ஒன்றாய்ப் பொருட்டன்மையால் வேறாய், உதவுதற்றன்மையால் உடனாய்ப் புணரும்புணர்ப்பாம். பூமாலைக்கு மேற்கொள்ளப்படும் பூக்கள் நால் வகைய. அவை வருமாறு: 1. கோட்டுப்பூ 2. கொடிப்பூ 3. நீர்ப்பூ 4. நிலப்பூ என்பன. இதுபோல் செந்தமிழ்ப் பாமாலைக்கும் நால்வகைச் சொன்மலர்கள் வருமாறு: 1. இயற்சொல் 2. திரிசொல் 3. திசைச்சொல் 4. வடசொல் என்பன.

     சிவபெருமான் செந்தமிழ்ப்பாமாலையின்கண் நனிமிகு வேட்கையுடையன் என்பதனைப் பின்வருவனவற்றாலுணர்க :

     "நல்லிசை ஞானசம்பந்தனு நாவினுக் கரசரும் பாடிய நற்றமிழ் மாலை, சொல்லியவே சொல்லி ஏத்துகப்பானை" (7. 67 - 5)