பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

309
     (பொ - ள்) "வடிவனைத்தும் . . . குருவே" - நுண்வடிவாய காரணமாயையினின்று, பருவடிவாய்க் காரியமாய உலகு உடல் உலகியற் பொருள் அத்தனையும் திருவுள்ளத் திருக்குறிப்பாற் றந்தருளிய, தனக்கெனவொரு வடிவமில்லாத, தூய வாலறிவான மேலாய மெய்ப் பொருளே! அடியேனுடைய மனத்தினின்று மறுக்கஞ் செய்யும் மாயையின் கூட்டத்தைக் கெடுத்தற் பொருட்டுக் கொடிகட்டி எழுந்தருளி வரும் சிவகுருவே!

     "என்தெய்வமே . . . வாழ்வே" - எளியேனை ஆட்கொண்டருளும் முழுமுதற்றெய்வமே, குற்றம் ஒரு சிறிதும் இல்லாதவகையான எளியேனுக்குப் பேரின்பப் பெருவெள்ளம் வந்து நிறைந்து வழியும்படியும், அடியேனுக்கு உன் பேரருட்பெருந்தண்ணளி பற்றும்படியும் உன் மெய்யுணர்வே மெய்யடியாக விளங்கும் திருவடியினைத் தூக்கி எடுத்து அடியேன் முடியினில் வைத்தருளுதல் வேண்டும்; (ஆருயிர்களின் உய்வின் பொருட்டு அவ்வப்போது கொண்டு வெளிப்படும் அருட்டிருமேனியன்றி உண்மையில் ஆண்டானுக்கு யாண்டும் திருமேனி இன்று) ஏனைய மாயா காரியப் பொருட்குக் கூறுவது போன்று முதலும் முடிவும் எனச்சொல்லப்படும் நிலைகள் ஒன்றுமில்லாது, (அதுபோல் காலத்தாலும் இடத்தாலும் வரையறுக்கப்படுவ தென்னும்) கண்டமில்லாது எங்கும் நீக்கமறநிறைந்து நிற்கும் அகண்ட வற்றாவாழ்வே.

     (வி - ம்.) திருவடிச்சிறப்பு வருமாறு :

"திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்
 திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்கும்
 திருவடி ஞானஞ் சிறைமல மீட்கும்
 திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே."
- 10. 1572
(3)
 
வாழ்வனைத்தும் மயக்கமெனத் தேர்ந்தேன் தேர்ந்த
    வாறேநான் அப்பாலோர் வழிபா ராமல்
தாழ்வுபெற்றிங் கிருந்தேன்ஈ தென்ன மாயந்
    தடையுற்றால் மேற்கதியுந் தடைய தாமே
ஊழ்வலியோ அல்லதுன்றன் திருக்கூத் தோஇங்
    கொருதமியேன் மேற்குறையோ வுணர்த்தா யின்னம்
பாழ் அவதிப் படஎனக்கு முடியா தெல்லாம்
    படைத்தளித்துத் துடைக்கவல்ல பரிசி னானே.
     (பொ - ள்) "வாழ்வனைத்து . . . மாயம்" - (உலகத்தின்கண் சுட்டியுணரப்படும் பொருள்கள் அனைத்தும் மாயாகாரியமாகும், அவற்றால் வருவதே உலகவாழ்வெனப்படும்) இவ்வாழ்வனைத்தும் மீண்டும் பிறப்பதற்குரிய மயக்கத்தைத் தருமெனப் பலவகையானும் தெளிந்தேன்; தெளிந்தபடியே, பிறவாநிலை எய்தி மேலோங்கிப் போவதற்கு அதன் பின் வழிபாராமல், தடையுற்றுக் காலம் போக்கி இங்கிருக்கின்றேன். இஃது என்னமயக்கம்.